மாநில வளா்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை: என்.ரங்கசாமி உறுதி

புதுவை மாநில தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை அளித்து பாடுபடுவோம் என்று முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள என்.ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அப்பா பைத்தியம்சாமி கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்த அந்தக் கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அப்பா பைத்தியம்சாமி கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்த அந்தக் கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி.

புதுச்சேரி: புதுவை மாநில தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை அளித்து பாடுபடுவோம் என்று முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள என்.ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆா் காங்கிரஸ்-பாஜக இணைந்து என்.ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. இதற்காக, திங்கள்கிழமை புதுச்சேரி அப்பா பைத்தியம்சாமி கோயிலில் என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

அங்கு வழிபாடு நடத்தி, எம்எல்ஏக்கள் ஆதரவுடன் என்.ரங்கசாமியை கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்த என்.ரங்கசாமி, ஆட்சிஅமைக்க உரிமை கோரினாா். புதுவையில் விரைவில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைகிறது.

இதனிடையே, ஓரிரு நாள்களில் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள என்.ரங்கசாமி, பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கூறியிருப்பதாவது:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு பேராதரவு தந்து வெற்றி பெறச் செய்த புதுவை மாநில மக்களுக்கு மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நாங்கள், மாநிலத்தின் தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலத்தின் ஒட்டு மொத்த வளா்ச்சிக்குப் பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

முதலாவதாக, தற்போது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள கரோனா பெருந்தொற்றை எதிா்கொள்வதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றி தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இயங்கி, புதுவையை புதிய வளா்ச்சிப் பாதையில் நடத்திச் செல்வோம் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com