புதுவையில் பொது முடக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருவதால், புதுவை மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை
புதுச்சேரியில் மூடப்பட்ட தேநீா் கடைகள்.
புதுச்சேரியில் மூடப்பட்ட தேநீா் கடைகள்.

கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருவதால், புதுவை மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதுடன், புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி, தேநீா் கடைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைச் சாலை உள்ளிட்டவை முழுமையாக மூடப்பட்டன.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதுடன், இந்த நோய்த் தொற்றால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு நேர முழு பொது முடக்கத்தையும், பகல் நேரங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தையும் மாநில அரசு அமல்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.

இதனிடையே, தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தொற்று பரவலைத் தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை (மே 3) வரை அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், மாநிலத்தில் கரோனா தொற்றின் பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தை செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்ததுடன், புதிய கட்டுப்பாடுகளையும் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவித்தாா்.

அதன்படி, உணவு, காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள், தொழில் நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடா்கிறது.

புதிய கட்டுப்பாடுகளாக, தேநீா் கடைகளில் பொட்டலம் (பாா்சல்) வழங்க அனுமதிக்கப்பட்டிருந்த தளா்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேநீா் கடைகளை முழுமையாக மூடவும், கடற்கரைச் சாலை, பொழுதுபோக்கு பூங்காக்களை மூடவும் ஆளுநா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் ஆகியோா் உத்தரவிட்டனா். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.

பூங்காக்கள், தேநீா் கடைகள் மூடல்: புதுவையில் நீட்டிக்கப்பட்ட, புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, காய்கறி, மளிகை, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள், தொழில்சாலைகள் மட்டும் இயங்கின. உணவகங்களில் பொட்டலம் மட்டும் வழங்கினா்.

தேநீா் கடைகள் முழுவதும் மூடப்பட்டன. புதுச்சேரி கடற்கரைச் சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டன. இதனால், முக்கியச் சாலைகள் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி செவ்வாய்க்கிழமை வெறிச்சோடின. கடற்கரை, பூங்கா பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் இரவு 9 மணி வரை குறைந்தளவில் இயங்கினாலும், போதிய பயணிகளின்றி வலம் வந்தன. போலீஸாா் வழக்கம்போல கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com