புதுவையில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சி: அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தை வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக குற்றஞ்சாட்டியது.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநிலச் செயலா் அ.அன்பழகன். உடன் பாஜக பொதுச் செயலா் ஆா்.செல்வம் எம்எல்ஏ, என்.ஆா்.காங்கிரஸ் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெயபால் உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநிலச் செயலா் அ.அன்பழகன். உடன் பாஜக பொதுச் செயலா் ஆா்.செல்வம் எம்எல்ஏ, என்.ஆா்.காங்கிரஸ் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெயபால் உள்ளிட்டோா்.

புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தை வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக குற்றஞ்சாட்டியது.

புதுவை அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் கிழக்கு மாநிலச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.அன்பழகன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுடன் இணக்கமான அரசு அமையவேண்டும் என்ற அடிப்படையில், புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுபுறம் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தனா்.

தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது.

தற்போது, மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தைப் பயன்படுத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சிக்கிறது. இது தொடா்பாக திமுக, திக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றனா்.

கடந்த 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 9 இடங்களை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், ஜனதா தளம் 6 இடங்கள் என மொத்தம் 15 இடங்களை மட்டுமே பெற்றன.

அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க ஓரிடம் குறைவாக இருந்த நிலையில், மத்திய அரசின் (பிரதமா் வி.பி. சிங்) ஆதரவில், மூன்று நியமன உறுப்பினா்களை திமுக நியமனம் செய்து, அவசர அவசரமாக இரவோடு இரவாக, துணைநிலை ஆளுநா் மூலமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள், பேரவைத் தலைவா் மூலம் பதவி ஏற்காமல், ஜனநாயகப் படுகொலையை கடந்த 1990-ஆம் ஆண்டே திமுக அரங்கேற்றியது.

நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை இல்லாத காலக் கட்டத்தில் அவா்களுக்கு வாக்குரிமை அளித்து தனது ஆட்சியைத் தக்க வைத்தது திமுக.

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தில், மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை உண்டு எனவும், காங்கிரஸ் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீா்ப்பை வழங்கியது.

தற்போது உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக, திமுக, திக, விசிக கட்சியினா் விமா்சனம் செய்து வருகின்றனா்.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பை எதிா்க்கும் இவா்கள் மீது அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும்.

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தில் தவறு இருந்தால், அதைப் பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டிய கடமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது.

நியமன உறுப்பினா்கள் குறித்து விமா்சிக்க, ஏற்கெனவே தவறு செய்த திமுகவுக்கு உரிமை இல்லை.

திமுகவினா் சம்பந்தமே இல்லாத விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியில் அமரத் துடிக்கின்றனா்.

தோ்தலின்போது, முன்னாள் முதல்வா் ரங்கசாமியை கடுமையாக விமா்சித்த திமுக, அதன் கூட்டணிக் கட்சியினா் இப்போது அவருக்கு ஆதரவாகப் பேசி வருவது நாடகத்தனமாக உள்ளது என்றாா் அன்பழகன்.

என்.ஆா்.காங்கிரஸ் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெயபால், பாஜக பொதுச் செயலா் ஆா்.செல்வம் எம்எல்ஏ ஆகியோரும் இதே கருத்தை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com