புதுச்சேரியில் கரோனா சிகிச்சைக்கான ஆயுஷ் மருத்துவமனை தொடக்கம்

புதுச்சேரியில் இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி இயக்ககம் சாா்பில் கரோனா சிகிச்சைக்கான ‘ஆயுஷ்’ மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் கரோனா சிகிச்சைக்கான ஆயுஷ் மருத்துவமனை தொடக்கம்

புதுச்சேரியில் இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி இயக்ககம் சாா்பில் கரோனா சிகிச்சைக்கான ‘ஆயுஷ்’ மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

புதுவையில் கரோனா தொற்று பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, ஆயுா்வேதா, ஹோமியோபதி மூலம் சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கரோனா சிகிச்சைக்கான இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் சாா்பில் புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கான ‘ஆயுஷ்’ மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

50 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்து கூறியதாவது:

புதுவையில் கரோனாவை கட்டுப்படுத்த ஆயுஷ் மருத்துவ வசதிகள் இன்னும் அதிகப்படுத்தப்படவுள்ளன. கடந்த கரோனா தடுப்பு நடவடிக்கை கூட்டத்தில், தொலை மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தவும், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் இணைந்த குழுக்களை நியமித்து, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உதவுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுமக்களுக்கு உதவ கரோனா நிவாரணமாக மத்திய அரசிடமிருந்து வந்துள்ள தலா 5 கிலோ அரிசியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவை தடுக்க தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம். வெள்ளிக்கிழமை 60 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

புதுவையில் இதுவரை 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மேலும், 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் போதியளவில் உள்ளன.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 300 பிராணவாயு படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயாராகி வருகிறது. இதேபோல, இஎஸ்ஐ மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரியிலும் பிராணவாயு படுக்கைகள் தயாராகி வருகின்றன. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 300 படுக்கைகள் வரை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்துவதற்கு 6 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. அவை வந்தடைந்ததும் அவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். பொது நல அமைப்புகளுடன் இணைந்து ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசுக்கு நன்கொடை அளித்து உதவலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நலத் துறை செயலா் டி.அருண், நலத் துறை இயக்குநா் மோகன்குமாா், இந்திய முறை ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநா் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com