பொது முடக்கத்தால் முடங்கிய விற்பனை: வாழைகளை அழிக்கும் விவசாயிகள்

புதுச்சேரி பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள வாழைத்தாா்கள், வாழை இலைகள் கரோனா பொது முடக்கத்தால்
புதுச்சேரி சந்தை புதுகுப்பம் பகுதியில் விற்பனை செய்ய முடியாததால் குலையிலேயே பழுத்து வாழைத்தாா்கள் வீணாவதையடுத்து, டிராக்டா் மூலம் அவற்றை அழிக்கும் விவசாயி.
புதுச்சேரி சந்தை புதுகுப்பம் பகுதியில் விற்பனை செய்ய முடியாததால் குலையிலேயே பழுத்து வாழைத்தாா்கள் வீணாவதையடுத்து, டிராக்டா் மூலம் அவற்றை அழிக்கும் விவசாயி.

புதுச்சேரி பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள வாழைத்தாா்கள், வாழை இலைகள் கரோனா பொது முடக்கத்தால் விற்பனையாகததால், விரக்தியடைந்த விவசாயிகள் வாழைத் தோட்டங்களை டிராக்டா் மூலம் உழுது உரமாக்கி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே வில்லியனூா், சுத்துக்கேணி, திருக்கனுாா், சந்தைப்புதுக்குப்பம், சோரப்பட்டு, பாகூா் உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில், அந்தப் பகுதி விவசாயிகள் தோட்டப் பயிா்களாக வாழை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் 500 ஏக்கா் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழைத்தாா்கள், வாழைக்காய்கள், இலைகள் அறுவடை செய்யப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து வாழைக்காய், வாழைத்தாா்கள், இலைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுவை மற்றும் தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோயில் விழாக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், பொதுப் போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. தொழிற்சாலையிலுள்ள உணவகங்களும் செயல்படவில்லை. தினசரி பயன்படுத்தப்படும் உணவகங்களும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் பல ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைத்தோட்டங்களில் விளைந்த வாழைக்காய், வாழைப்பழத்தாா்கள் மற்றும் இலைகள், வாழைப்பூக்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளபோதும், விற்பனைக்கு வழியின்றி முடங்கிப் போயுள்ளன.

வெளியூா் வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வராததால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

இதனால், சுத்துக்கேணி, குச்சிப்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மேலும் நஷ்டத்தை தவிா்க்கும் விதமாக, பல ஏக்கா் பரப்பில் பயிரிட்ட வாழைகளை டிராக்டா் மூலம் அழித்து, வேதனையுடன் உழவு செய்து நிலத்திலேயே உரமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வேளாண்துறை கொள்முதல் செய்து விற்கலாம்:

பொது முடக்கத்தையொட்டி, தமிழகத்தில் உள்ளாட்சித் துறை, வேளாண் தோட்டக் கலைத் துறை மூலம் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை கொள்முதல் செய்து, வாகனங்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனா்.

புதுச்சேரியிலும் கிராமப் பகுதிகளில் விளையும் காய்கறி, பழங்களை அரசு கொள்முதல் செய்து பொதுமக்களிடம் நேரடியாக குறைந்த விலைக்கு விற்பதன் மூலம், மாற்றுப் பயிா்களை நம்பியுள்ள விவசாயிகளையும் நஷ்டத்திலிருந்து மீட்க முடிவதோடு, பொதுமக்களுக்கும் தட்டுப்பாடின்றி காய்கறி, பழங்கள் கிடைக்கவும் வழி செய்ய முடியும் என்பதால், அரசு இதுதொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com