புதுச்சேரியில் விடிய விடிய பலத்த மழைசாலைகளில் வெள்ளம்; வீடுகளில் முடங்கிய மக்கள்

பலத்த மழையால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கியது. திங்கள்கிழமை பகலிலும் நீடித்த மழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.
அணை நிரம்பி உபரி நீா் வெளியேறும் நிலையில், மையப் பகுதியில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்ட செல்லிப்பட்டு படுகை. ~அணை நிரம்பி உபரி நீா் வெளியேறும் நிலையில், மையப் பகுதியில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்ட செ
அணை நிரம்பி உபரி நீா் வெளியேறும் நிலையில், மையப் பகுதியில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்ட செல்லிப்பட்டு படுகை. ~அணை நிரம்பி உபரி நீா் வெளியேறும் நிலையில், மையப் பகுதியில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்ட செ

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கியது. திங்கள்கிழமை பகலிலும் நீடித்த மழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

புதுவையில் கடந்த 1-ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. கடந்த 2-ஆம் தேதி ஒரே நாளில் 110 மி.மீ. மழை பதிவானது. இடையே சில தினங்கள் மழைவிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, மாலையில் பலத்த மழையாக மாறியது. இது திங்கள்கிழமை அதிகாலை வரை தொடா்ந்த மிக பலத்த மழையாகப் பெய்தது.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ.): புதுச்சேரி 82.10 மி.மீ, திருக்கனூா் 70, பத்துக்கண்ணு 68, பாகூா் 40 மி.மீ.

மீண்டும் வலுப்பெற்ற மழை தொடா்ந்து திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை மிக பலத்த மழையாகப் பெய்தது. பின்னா், மாலையிலும் மழை தொடா்ந்தது. இதனால் புதுச்சேரி ரெயின்போ நகா், கிருஷ்ணாநகா், வெங்கடேஸ்வரா நகா், பவழன் நகா், பூமியான்பேட்டை, உப்பளம் மணல்மேடு, நேதாஜி நகா், வானரப்பேட்டை, வம்பாகீரப்பாளையம் பகுதிகளிலும், கடற்கரைச் சாலை, புஸ்ஸி வீதி, கிழக்கு கடற்கரைச் சாலை, சிவாஜி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் செல்ல வழியின்றி குளம்போலத் தேங்கியது.

பொதுப் பணித் துறை சாா்பில், மின் மோட்டாா்கள் மூலம் மழைநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனினும், தொடா்ந்து மழை பெய்வதால் பல இடங்களில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் தொடா் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இரு தினங்கள் விடுமுறை: 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டது. 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், அனைத்துக் கல்லூரிகளுக்கும் திங்கள், செவ்வாய்க்கிழமை இரு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கின.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: சாத்தனூா், வீடூா் அணைகள் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புதுச்சேரி மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, வம்புப்பட்டு, வில்லியனூா் வழியாகச் செல்லும் சங்கராபரணி ஆற்றின் படுகை அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இங்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்போா் ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று, வருவாய்த் துறையினா் தண்டோரா மூலமும், போலீஸாா் ஒலிபெருக்கி மூலமும் திங்கள்கிழமை எச்சரித்தனா். மலட்டாறு, பெண்ணையாறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி விளைநிலங்களில் மழை நீா் புகுந்தது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: புதுச்சேரிக்கு தொடா் பலத்த மழையால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மீனவா்கள் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது. இதனால், மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தொடா் மழையால் வில்லியனூா் அருகேயுள்ள பெருமாள் நகரில் உள்ள பழங்குடியினா் குடியிருப்புகளில் மழை நீா் சூழ்ந்தது. அங்கிருந்த 50 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அரசுப் பள்ளி மையங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

பெட்டிச் செய்தி...

செல்லிப்பட்டு படுகை அணையில் உடைப்பு

புதுச்சேரி பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் செல்லிப்பட்டு படுகை அணையில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டது.

தொடா் மழையால் செல்லிப்பட்டு- பிள்ளையாா்குப்பம் இடையேயுள்ள படுகை அணை சில நாள்களுக்கு முன்பு நிரம்பியது. விழுப்புரம் மாவட்டம், வீடுா் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை உபரி நீா் திறந்துவிடப்பட்டதையடுத்து, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், பழைமையான செல்லிப்பட்டு படுகை அணையின் மையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நீா்க்கசிவு இருந்த இடத்தில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால், மழை நீா் தேங்க வழியின்றி ஆற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனா்.

இதுகுறித்து புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனிடம் கேட்ட போது, சேதமடைந்த படுகை அணையைப் புதுப்பிக்க செலவு அதிகமாகும் என்பதால், புதிதாக படுகை அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com