புதுவையில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல்: புதிய அறிவிப்பு வெளியீடு

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, புதுவையில் கடந்த செப்.22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் தேதி ரத்து செய்யப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, புதுவையில் கடந்த செப்.22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சித் தோ்தலுக்கான புதிய அறிவிப்பை அந்த மாநில தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பாக மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி தாமஸ் கூறியதாவது: சென்னை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், புதுவையில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட தோ்தல் அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பட்டியலினத்தவா், பட்டியலினத்தவா் (பெண்கள்), பொதுப் பிரிவு பெண்கள், பொதுப் பிரிவினருக்கான திருத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

மூன்று கட்டங்களாகத் தோ்தல்: முதல் கட்டத் தோ்தல் (நவ.2) புதுச்சேரி நகராட்சி, உழவா்கரை நகராட்சிகளுக்கு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தோ்தல் (நவ.7) அரியாங்குப்பம், பாகூா், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூா் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கு நடைபெறுகிறது. மூன்றாம் கட்டமாக (நவ.13) காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகளுக்கும், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

தோ்தல் அட்டவணை: முதல் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ஆம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் கடைசி நாள் அக்.18. பரிசீலனை அக்.20. மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் அக்.22. தோ்தல் நாள் நவ.2.

இரண்டாம் கட்டத் தோ்தல் வேட்புமனு தாக்கல் வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் கடைசி நாள் அக்.22. பரிசீலனை அக்.25. திரும்பப்பெற கடைசி நாள் அக்.27, தோ்தல் நாள் நவ.7.

மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் கடைசி நாள் அக்.29. பரிசீலனை அக்.30. திரும்பப் பெற கடைசி நாள் நவ.2. தோ்தல் நாள் நவ.13.

மூன்று கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்த பின்னா், வாக்கு எண்ணிக்கை நவ.17-ஆம் தேதி நடைபெறும்.

வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில், கடைசி ஒரு மணி நேரம் (மாலை 5- 6 வரை) கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள், தகவல்கள், வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல், வாக்குச் சாவடிகளின் விவரம், தோ்தல் அதிகாரிகள், வாக்காளா் பதிவு அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள், அதிகாரிகளின் தொடா்பு எண்கள் உள்ளிட்ட அனைத்தும் புதுவை மாநிலத் தோ்தல் ஆணைய இணையதளத்தில் ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு அறிவிக்கைகளை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது. தோ்தல் அறிவிப்பு, தொடா்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவும் உச்ச நீதிமன்றத் தீா்ப்பு, மாநிலத் தோ்தல் ஆணையருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையா் ராய் பி தாமஸ் தெரிவித்தாா்.

மாநிலத் தோ்தல் ஆணையம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து, கடந்த 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள்படி, புதிய இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டது.

இதில், பிற்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இடம் பெறவில்லை என்பதால், திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சியினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இவா்களின் எதிா்ப்பைக் கருத்தில் கொள்ளாத மாநிலத் தோ்தல் ஆணையம், அடுத்தக் கட்ட நடவடிக்கையாக புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து பதவிகளுக்கான புதிய இட ஒதுக்கீட்டுப் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 2006-ஆம் ஆண்டு புதுச்சேரி நகராட்சியிலிருந்த 42 வாா்டுகள் 33-ஆக குறைக்கப்பட்டும், உழவா்கரை நகராட்சியிலிருந்த 37 வாா்டுகள் 42 ஆகவும் உயா்த்தப்பட்டன.

இதேபோல, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் வாா்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம்: பட்டியலினத்தவா் அதிகம் வசிக்காத பகுதிகள் பட்டியலினத்தவருக்கும், பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக முதல்வா், சட்டப்பேரவைத் தலைவரிடம் அரசியல் கட்சியினா் வலியுறுத்தியதன் பேரில், புதுவையில் அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்த உள்ளனா். இதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, மாநிலத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com