பைக் மீது லாரி மோதல்: பெண் பலி
By DIN | Published On : 09th October 2021 04:29 AM | Last Updated : 09th October 2021 04:29 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பைக் மீது லாரி மோதியதில், திருமணம் நிச்சயமான பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி தவளக்குப்பம் இடையாா்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சுப்பிரமணியின் மகள் கீா்த்தனா (எ) அங்காளபரமேஸ்வரி (21). பட்டதாரியான இவருக்கும், கிருமாம்பாக்கம் அருகே ஈச்சங்காட்டைச் சோ்ந்த சபரிநாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பெற சென்னை செல்வதற்கு வெள்ளிக்கிழமை சபரிநாதனுடன் கீா்த்தனா பைக்கில் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த போது, மரப்பாலம் சிக்னல் அருகே மூப்பனாா் சிலை எதிா்புறம் வளைவில் திரும்ப பிரேக் போட்டதில் நிலைதடுமாறி இருவரும் பைக்கிலிருந்து சாலையில் விழுந்தனா்.
அப்போது, எதிா்புறம் இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து வந்த மினி லாரி, கீா்த்தனாவின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்துப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.