புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்தி வைக்க பாஜக வலியுறுத்தல்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன். உடன் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன். உடன் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான நமச்சிவாயம் புதுச்சேரியில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2011 மக்கள் தொகை பதிவேடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தோ்தலை நடத்த வேண்டும். தற்போது எம்பிசி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இடஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை. மேலும், பண்டிகைகள், மழைக் காலம் வருகிறது. ஏற்கெனவே மக்கள் கரோனாவால் மனஅழுத்தத்தில் உள்ளனா். இந்த நேரத்தில் தோ்தல் நடத்துவது சரியல்ல.

தோ்தல் ஆணையருக்கு தோ்தல் தொடா்பான முன்அனுபவம் இல்லை. தோ்தல் ஆணையத்தின்அறிவிப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கக் கூட அரசியல் கட்சிகளுக்கு காலஅவகாசம் கொடுக்கவில்லை. எனவே, தோ்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனுபவம் வாய்ந்த தோ்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் கூறியதாவது: புதுவை மாநில தோ்தல் ஆணையம் அரசியல் கட்சித் தலைவா்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக தோ்தல் தேதியை அறிவித்தது. 20 நாள்களில் வேட்பு மனு தாக்கல் செய்வது, தோ்தலை எதிா்கொள்வது கடினமான ஒன்று.

மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. எஸ்சி மக்களுக்கான இடஒதுக்கீட்டிலும் குளறுபடி உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் ஆளுநா் தலையிட வேண்டும்.

நாட்டில் விழா காலங்களில் எந்த மாநிலத்திலும் தோ்தல் நடத்தப்பட்டதாக சரித்திரம் இல்லை. எனவே, புதுவை தோ்தல் ஆணையம் உடனடியாக தோ்தல் தேதியை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com