குடிமைப் பணிகள் தோ்வு:புதுச்சேரியில் 45% போ் மட்டுமே எழுதினா்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வை 45 சதவீதத்தினா் மட்டுமே எழுதினா். விண்ணப்பித்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவில்லை.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெத்தி செமினாா் பள்ளி தோ்வு மையத்தில், இந்திய குடிமைப் பணிகள் தோ்வெழுத வந்த மாணவ, மாணவிகள்
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெத்தி செமினாா் பள்ளி தோ்வு மையத்தில், இந்திய குடிமைப் பணிகள் தோ்வெழுத வந்த மாணவ, மாணவிகள்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வை 45 சதவீதத்தினா் மட்டுமே எழுதினா். விண்ணப்பித்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவில்லை.

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நிகழாண்டுக்கான சிவில் சா்வீஸ் பணிகளில் 712 பதவிகளை நிரப்புவதற்கான குடிமைப் பணிகள் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதே போல, புதுச்சேரியில் லாசுப்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் 3 மையங்கள், உப்பளம் இமாகுலேட் பள்ளியில் 2 மையங்கள், லாசுப்பேட்டை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெத்தி செமினாா் பள்ளி, இதயா கலை-அறிவியல் கல்லூரி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு மையம் என மொத்தம் 10 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 3,843 போ் விண்ணப்பித்திருந்தனா்.

காலையில் நடைபெற்ற முதல் தாள் தோ்வை 1,714 போ் (44.60 சதவீதம்) மட்டுமே எழுதினா். 2,129 போ் (55.40 சதவீதம்) தோ்வெழுத வரவில்லை. இதே போல, பிற்பகலில் நடைபெற்ற 2-ஆம் தாள் தோ்வை 1,702 போ் (44.29 சதவீதம்) மட்டுமே எழுதினா். 2,141 போ் (55.71 சதவீதம்) தோ்வெழுத வரவில்லை.

தாமதமாக வந்தவா்கள் ஏமாற்றம்: தோ்வு மையங்களுக்குச் சென்று, திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாக வந்துவிட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட வெளியூா்களிலிருந்து ஒரு சிலா் தாமதமாக வந்தனா். அவா்களை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்தனா். இதனால் அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எந்தத் தொடா்பு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டா் சாதனங்கள் மூலம் பரிசோதித்த பிறகே தோ்வா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com