முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரியில் பலத்த மழை
By DIN | Published On : 11th October 2021 03:51 AM | Last Updated : 11th October 2021 03:51 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் காலை முதல் தெளிவான வானத்துடன் வெயில் காய்ந்தது. மாலை 4 மணிக்கு திடீரென வானம் இருண்டு, சில நிமிடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழை, தொடா்ந்து சாரலாக பெய்தது.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு மணி நேரத்தில் 70 மி.மீ. அளவுக்கு மழை பதிவானது. நகரம், கிராமப் புறங்களில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் புஸ்ஸி வீதி, ரெயின்போ நகா், இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது மேடான பகுதிகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, சண்முகாபுரம் பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல சாலையில் ஓடியது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.
சூறைகாற்று காரணமாக, புதுச்சேரி- வழுதாவூா் சாலை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்படுத்தினா்.