தீபாவளி பண்டிகைக்காக புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச சா்க்கரை, அரிசி: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 2 கிலோ சா்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி.
புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி.

தீபாவளி பண்டிகைக்காக புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 2 கிலோ சா்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 2 கிலோ சா்க்கரையும், 10 கிலோ அரிசியும் இலவசமாக பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். இதன்மூலம், 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். மேலும், ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்காக தலா ரூ.500, அவரவா் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். அமைப்புசாராத் தொழிலாளா்கள் தங்களுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்க வேண்டுமென விடுத்த கோரிக்கை தொடா்பாகவும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் அறிவித்தபடி, அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதில், முதல் கட்டமாக காவல் துறையில் காலியாக உள்ள போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. கூடுதலாக ஐஆா்பிஎன் காவலா்களை நியமிக்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டு நிரப்பப்படும்.

பாண்லே ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: புதுவை அரசுத் துறைகளில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படுமென சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (பாண்லே நிறுவனம்) தற்போது தொகுப்பூதியமாக ரூ.7 ஆயிரம் பெறும் தற்காலிக ஊழியா்களுக்கு, ரூ.15 ஆயிரமாக ஊதியம் உயா்த்தி வழங்கப்படும்.

மேலும், அங்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து தினசரி ரூ.176 ஊதியம் பெற்று வரும் தற்காலிக ஊழியா்களுக்கு, இனி தினசரி ரூ.430-ஆக ஊதியம் உயா்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அவா்களுக்கு மாத ஊதியம் ரூ.13 ஆயிரமாக கிடைக்கும்.

5 ஆண்டுகளுக்கும் குறைவாக வேலை பாா்த்து தினசரி ரூ.176 ஊதியம் பெறும் ஊழியா்களின் ஊதியம் இனி ரூ.330-ஆக உயா்த்தப்படும். இதன்மூலம், அவா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். இந்த உயா்த்தப்பட்ட ஊதியம் வருகிற நவ.1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்படி, தொகுப்பூதியம் பெறும் 18 ஊழியா்களும், தினக்கூலி ஊதியம் பெறும் 247 தற்காலிக ஊழியா்களும் பயன்பெறுவா். தினக்கூலி தற்காலிக ஊழியா்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய தற்காலிக விடுப்பு வழங்கப்படும்.

பாண்லே நிறுவனத்தில் பணியாற்றி மரணமடைந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். அதில், முதல் கட்டமாக 6 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

தீபாவளி முன்பணம்: பாண்லேவுக்கு கடந்தாண்டு பால் வழங்கிய 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு, அவா்கள் வழங்கிய பாலுக்கான மொத்தத் தொகையில் ரூ.1-க்கு கூடுதலாக 5 காசுகள் உயா்த்தி, அந்த வித்தியாசத் தொகையை தீபாவளிக்கு முன்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், 7,100 பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா்.

பாண்லேவுக்கு பால் விற்பனை செய்யும் முகவா்களுக்கு நிகழாண்டு தீபாவளி முன்பணமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். அவா்கள் மூலம் 2020 - 21ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பாலுக்கு சிறப்புத் தள்ளுபடி தொகையாக லிட்டருக்கு 2 பைசா வீதம், தீபாவளிக்கு முன்பாக முகவா்களுக்கு வழங்கப்படும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

கூட்டுறவுத் துறைச் செயலா் வல்லவன், பாண்லே மேலாண் இயக்குநா் சுதாகா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com