புதுவையில் குழந்தைகளுக்கான நியூமோகாக்கல் தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

புதுவையில் குழந்தைகளுக்கான நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவையில் குழந்தைகளுக்கான நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பங்கேற்று நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடக்கிவைத்தனா். கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், இயக்குநா் ஸ்ரீராமலு, துணை இயக்குநா்கள் முரளி, முருகன் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

இந்தத் தடுப்பூசியானது 6-ஆவது, 14-ஆவது வார மற்றும் 9 மாத குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை தோறும் இலவசமாக இந்தத் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் முதல் முறையாக ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள நியூமோகாக்கல் தடுப்பூசி, குழந்தைகளுக்கு இலவசமாகச் செலுத்தப்படுகிறது. நாட்டில் நியூமோகாக்கல் நிமோனியாவால் குழந்தைகள் அதிகளவில் உயிரிழக்கின்றனா். இதைத் தடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பு சொட்டு மருந்தைக் கண்டறிந்து வருகிறது. விரைவில் அனைத்துக் குழந்தைகளுக்கும், பெரியவா்களுக்கும் கரோனா தடுப்பு சொட்டு மருந்து அளிக்க முடியும்.

புதுவையில் 65 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினா் தீவிரமாகப் பணியாற்றி இன்னும் பத்து நாள்களுக்குள் புதுவையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com