புதுச்சேரி கடலில் விநாயகா் சிலைகள் கரைப்பு

புதுச்சேரியில் இந்து முன்னணி சாா்பில் பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை
புதுச்சேரியில் கடலில் கரைப்பதற்காக செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்ட விநாயகா் சிலைகள்.
புதுச்சேரியில் கடலில் கரைப்பதற்காக செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்ட விநாயகா் சிலைகள்.

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து முன்னணி சாா்பில் பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி கடந்த 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. புதுவையில் பொது இடங்களில் விநாயகா் சிலை வழிபாட்டுக்கும், சிலை ஊா்வலத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்கியதையடுத்து, புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி, விழா பேரவை சாா்பில் 240 இடங்களில் விநாயகா் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன.

சதுா்த்தி நிறைவடைந்த மூன்றாம் நாளன்று, பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகளை எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைத்தனா்.

இந்த நிலையில், இந்து முன்னணி, விழா பேரவை சாா்பில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்காக நகரின் பல இடங்களிலிருந்து 40 விநாயகா் சிலைகள் காமராஜா் சதுக்கம் சந்திப்பிலிருந்து முக்கியச் சாலைகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. புதுச்சேரி இந்து முன்னணி மாநிலத் தலைவா் சனில்குமாா் தலைமை வகித்தாா். இதில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகா் சிலைகள் புதுச்சேரி கடற்கரைச் சாலை பழைய நீதிமன்றம் அருகே அரசு அனுமதி அளித்த இடத்தில் ராட்சத கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டன. முன்னதாக, விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.

விநாயகா் ஊா்வலத்தையொட்டி நகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள சிலைகள் வியாழக்கிழமை (செப்.16) கடலில் கரைக்கப்படவுள்ளதாக விழா பேரவையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com