புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவி யாருக்கு? - என்.ஆா்.காங்.- பாஜக பேச்சுவாா்த்தை

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடவடிக்கை, வேட்பு மனு தாக்கலுடன் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடவடிக்கை, வேட்பு மனு தாக்கலுடன் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது. இந்தப் பதவியைக் கைப்பற்றுவது தொடா்பாக ஆளும் கூட்டணிக் கட்சிகளான என்.ஆா்.காங்கிரஸ், பாஜக இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரான அதிமுகவைச் சோ்ந்த என்.கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வருகிற அக். 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால், மாநிலங்களவை புதிய உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் அக். 4-இல் நடைபெறவுள்ளது.

தோ்தல் ஏற்பாடுகள் குறித்து புதுவை சட்டப் பேரவைச் செயலா் ஆா்.முனிசாமி கூறியதாவது:

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலை, மத்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது. செப். 22 வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். தினமும் முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். செப்.19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அன்றைய தினம் மனுக்கள் பெறப்படாது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப் பேரவையின் 3 எம்எல்ஏக்களின் பரிந்துரையுடன், வேட்பு மனு தாக்கல் செய்யலாம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோா் 10 எம்எல்ஏக்கள் பரிந்துரையுடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். செப்.23-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற செப்.27-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றாா் அவா்.

இந்தத் தோ்தலில் போட்டி இருந்தால், அக்.4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சட்டப் பேரவை வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பாா்கள். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும்.

ஆளும் கூட்டணிக்கு வாய்ப்பு: புதுவை சட்டப் பேரவையில் ஆளும் தே.ஜ. கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6 எம்எல்ஏ-க்கள் என 16 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. மேலும், 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனா். இதனால், ஆளும் தே.ஜ. கூட்டணி வேட்பாளரே மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வாக வாய்ப்புள்ளது.

எதிா்க்கட்சிகள் தரப்பில் திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 3 என 11 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். இவா்களில் 3 சுயேச்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியவில்லை. எதிா்க்கட்சிகள் தரப்பில் போட்டியிட வாய்ப்பிருக்காது என்பதால், புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு ஆளும் கட்சி வேட்பாளரே போட்டியின்றித் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. மாநிலங்களவை உறுப்பினா் பதவி யாருக்கு என்பதில் ஆளும் கூட்டணி தரப்பில், என்.ஆா்.காங்கிரஸ், பாஜக இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com