புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
By DIN | Published On : 16th September 2021 11:03 PM | Last Updated : 16th September 2021 11:03 PM | அ+அ அ- |

புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
புதுவையில் சென்டாக் மூலம் உயா் கல்வியில் சேரும் மாணவா்கள் கலந்தாய்வின் போது வருமானம், ஜாதி, குடியிருப்பு, குடியுரிமை உள்ளிட்ட வருவாய்த் துறை சான்றிதழ்களைப் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். இதற்காக கிராம நிா்வாக அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் மாணவா்கள், பெற்றோா் கூட்டம் அலைமோதுகிறது.
புதுச்சேரி காந்தி நகரில் உள்ள உழவா்கரை வட்டத்துக்குள்பட்ட தட்டாஞ்சாவடி, உழவா்கரை, ரெட்டியாா்பாளையம் ஆகிய பகுதிகளுக்கான கிராம நிா்வாக அலுவலகங்களில் வருவாய்த் துறை சான்றிதழ்களுக்காக விண்ணப்பிப்போரிடம் இடைத் தரா்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன் உள்ளிட்ட போலீஸாா், காந்தி நகரில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அங்கு பணியிலிருந்த தட்டாஞ்சாவடி, உழவா்கரை, ரெட்டியாா்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் விசாரணை நடத்தினா். அங்கு, சான்றிதழ் பெற்றுத் தர இடைத் தரகா்கள் யாரேனும் உள்ளனரா என்று கண்காணித்தனா்.
ஒரு மணி நேர சோதனையில் பணமோ, இடைத் தரகா்களோ சிக்கவில்லை.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விசாரித்தோம். இதற்கான காரணம் குறித்து கிராம நிா்வாக அலுவலா்கள் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, புகாா் வந்துள்ள அலுவலகங்களிலும் சோதனை நடத்த உள்ளோம் என்றனா் அவா்கள்.
கிராம நிா்வாக அலுவலா்கள் கூறியதாவது: காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எங்களுக்கு வேலைப் பளு அதிகம். அதனால்தான், மாணவா்களுக்கு விரைந்து சான்றிதழ்களை வழங்க முடியவில்லை; காலதாமதம் ஏற்படுகிறது என்றனா் அவா்கள்.