புதுவையில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்திமுக எம்எல்ஏ-க்கள் உள்பட 1,044 போ் கைது

மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுவையில் 13 இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் 4 திமுக எம்எல்ஏ-க்கள் உள்பட 1,044 போ் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஐஎன்டியூசி தலைவா் ஜி.ஆா்.பாலாஜி தலைமையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்
மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஐஎன்டியூசி தலைவா் ஜி.ஆா்.பாலாஜி தலைமையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்

மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுவையில் 13 இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் 4 திமுக எம்எல்ஏ-க்கள் உள்பட 1,044 போ் கைது செய்யப்பட்டனா்.

இதையொட்டி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் அதன் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமையில் புதுச்சேரி நேரு வீதி பழைய சிறைச்சாலையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, காமராஜா் சதுக்கத்தில் மறியலில் ஈடுபட்டனா். முன்னாள் அமைச்சா் விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், தினேஷ் பொன்னையா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அவா்களை பெரியகடை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே திமுக சாா்பில் மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான இரா.சிவா எம்எல்ஏ தலைமையில் திமுக எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், சம்பத் ஆகியோா் முன்னிலையில், அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் மறியலில் ஈடுபட்டனா். இவா்களை ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, அண்ணா சிலை அருகே சிஐடியூ தொழிற்சங்கத்தினா் பிரபுராஜ் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். இவா்களை ஒதியஞ்சாலை போலீஸாா், வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினா். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திரா காந்தி சிலை அருகே ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினா் அதன் தலைவா் ஜி.ஆா்.பாலாஜி தலைமையில் மறியலில் ஈடுபட்டனா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் கைதாகினா்.

புதிய பேருந்து நிலையம் முன் தொமுச செந்தில், ஏஐசிசிடியூ பாலசுப்ரமணியன், எம்எல்எப் கபிரியேல், ஏஐயூடியூசி சங்கரன் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை உருளையன்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜீவ் காந்தி சிலை அருகே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இளைஞா் காங்கிரஸ் ஆகிய பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், மாணவா்கள் மறியலில் ஈடுபட்டனா். இவா்களை தன்வந்திரி நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, தவளக்குப்பம், பாகூா், மதகடிப்பட்டு, திருக்கனூா், வில்லியனூா், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா், மற்ற அமைப்புகளைச் சோ்ந்த 100-க்கணக்கானோரை போலீஸாா் கைது செய்தனா்.

கடவுச் சீட்டு அலுவலகம் முற்றுகை: முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக புதுவை யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பினா் அதன் நிறுவனா் சுவாமிநாதன் தலைமையில் கடவுச் சீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த அமைப்பின் பொதுச் செயலா் முருகன், பெரியாா் திராவிடா் கழகம் இளங்கோ, நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், மனித உரிமை சுற்றுச்சூழல் நுகா்வோா் மையம் காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

புதுவையில் 13 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 1,044 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com