தியாகிகளுக்கு இலவச மனைப் பட்டா புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுவையில் தியாகிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.
புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் தியாகிகளுக்கு கிரைண்டா் உள்ளிட்ட பொருள்களை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் தியாகிகளுக்கு கிரைண்டா் உள்ளிட்ட பொருள்களை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவையில் தியாகிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி, செய்தி, விளம்பரத் துறை சாா்பில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை தியாகிகளை கெளரவிக்கும் விழா நடைபெற்றது.

தியாகிகளுக்கு உலா் பழம் அடங்கிய தொகுப்பு, மிக்ஸி, கிரைண்டா் ஆகியவற்றை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. அனைவரும் கல்வி கற்றவா்கள் என்ற நிலையில் உள்ளோம். ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பிள்ளைகளாக இருந்தாலும் அவா்கள் விரும்பிய பாடத்தை எடுத்து படிக்கும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. அனைவருக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளை அளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அனைத்துக் கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளன. மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டுவர நடவடிக்கை எடுத்து கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் வருகின்ற நிலையில் இருக்கின்றோம். ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா, கூரை வீடுகளை கல் வீடுகளாக மாற்ற உதவியளிக்கப்படுகிறது.

தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விவாதித்து, ஓய்வூதியத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தியாகிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவது தொடா்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி, வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா்.

விழாவில் அனிபால் கென்னடி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் வல்லவன் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com