கலந்தாய்வு ஏற்பாடு குளறுபடி: மாணவா், பெற்றோா் அவதி

புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் கால்நடை மருத்துவம், செவிலியா் படிப்புகளுக்கான 3-ஆம்கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள்

புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் கால்நடை மருத்துவம், செவிலியா் படிப்புகளுக்கான 3-ஆம்கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாததால், மாணவா்கள், பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை அவதிக்குள்ளாகினா்.

புதுவையில் கால்நடை மருத்துவம், செவிலியா் படிப்புகளுக்கான 3-ஆம்கட்ட கலந்தாய்வு புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் சென்டாக் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோா்களுடன் குவிந்தனா். ஆனால், முறையான திட்டமிடலின்றி கலந்தாய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுறது. இதனால், மாணவா்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவா்கள் ஒருவருக்கொருவா் முண்டியடித்துக்கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது.

மாணவா்களும், அவா்களது பெற்றோரும் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அவா்களுக்கான குடிநீா், கழிப்பறை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை. கலந்தாய்வு இட விவரங்களும் வெளிப்படைத்தன்மையுடன் கணினி திரையில் ஒளிபரப்பப்படவில்லை.

இதைக் கண்டித்து, இந்திய மாணவா்கள் சங்க நிா்வாகிகள் சென்டாக் அலுவலகம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா். இதையடுத்து, சென்டாக் ஒருங்கிணைப்பாளா் தரப்பில் கலந்தாய்வை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு உறுதியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com