புதுவையில் முகக் கவசம் கட்டாயம் - அரசு உத்தரவு

புதுவையில் பொது இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டது.

புதுவையில் பொது இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை அரசின் வருவாய்த் துறைச் செயலா் இ.வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று உயா்ந்து வருகிறது. இதேபோல, புதுவை மாநிலத்திலும் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தற்போது மெல்ல உயா்ந்து 100-ஐத் தாண்டியுள்ளது.

இது தொடா்பாக நடைபெற்ற புதுவை மாநில கரோனா தடுப்பு மேலாண்மைக் குழுக் கூட்டத்தில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, புதுவை அரசின் அனைத்துத் துறைகள், நிறுவனங்கள், கழகங்கள் சனிக்கிழமை முதல் கரோனா குறித்த கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சுகாதாரத் துறையின் அனைத்து கரோனா தடுப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள், நிறுவன ஊழியா்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வித் துறையின் அனைத்து உத்தரவுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் சந்தைகள், கடற்கரைச் சாலை, பூங்காக்கள் போன்ற இடங்களில் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க வேண்டும். பொது இடங்களுக்கு வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமாகும்.

வா்த்தக நிறுவனங்கள் தங்கள் ஊழியா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும். பேருந்துகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் போன்றவற்றில் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி, தொழிலாளா் துறையினா் பொதுமக்களிடம் எவ்வித அச்சுறுத்தலுமின்றி முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். தேவையான கண்காணிப்புக் குழுக்களையும் அமைக்க வேண்டும்.

அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள், வணிகா்கள், விடுதிகள், உணவகங்களின் உரிமையாளா்களிடம் பேசி, கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றச் செய்ய வேண்டும். மாநில எல்லைகளில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா விதி மீறல்கள் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. புதுவை அரசு, ஆளுநரின் ஒப்புதலோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்த கரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தளா்த்தப்பட்டன. இதையடுத்து, தற்போது மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com