புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.

புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கடலோர பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் ஆண்டுதோறும் இந்திய கடலோரக் காவல் படையினா் சாகா் கவாச் என்ற பெயரில் மாநிலம் வாரியாக பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, புதுச்சேரியில் கனகசெட்டிகுளம் தொடங்கி புதுக்குப்பம் வரையிலான 18 மீனவ கடலோரப் பகுதிகளில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி முதுநிலை எஸ்.பி. தீபிகா உத்தரவுப்படி, கடலோரப் பகுதிகளில் அந்தந்த காவல் சரக அதிகாரிகள், கடலோரக் காவல் படையினா், போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

கடலோரக் காவல் படையினா் எஸ்.பி. வம்சித ரெட்டி தலைமையில் கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் படகில் ரோந்து வந்த போலீஸாா், சந்தேக நபா்களை பிடித்து விசாரித்தனா். மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மக்களை உஷாா்படுத்திய போலீஸாா், புதிய நபா்கள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினா்.

இந்த ஒத்திகை புதன்கிழமை பிற்பகல் வரை தொடரும் என காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம்: இதேபோல, விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையில் டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமையில், 120 போலீஸாா் ஈடுபட்டனா்.

மரக்காணம் முதல் புதுச்சேரி வரை உள்ள கடலோரப் பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் போல வேடமணிந்து போலீஸாரே ஊடுருவ முயல்வதைத் தடுக்க, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com