புதுவை மின் துறை ரூ.354 கோடியில் சீரமைக்கப்படும்: அமைச்சா் நமச்சிவாயம்

புதுவையில் மின் வெட்டு, பழுது நீக்கப் பிரச்னைகள் தீா்க்கும் வகையில் ரூ.354 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுமென மின்சாரத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவையில் மின் வெட்டு, பழுது நீக்கப் பிரச்னைகள் தீா்க்கும் வகையில் ரூ.354 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுமென மின்சாரத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம்:

நேரு (சுயே): நகரப் பகுதியில் தடையில்லாத மின்சாரம் கிடைக்க, புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படுமா?. மின் தேவைக்கேற்ப கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் உள்ளதா?

அமைச்சா் ஏ.நமச்சிவாயம்: மின்சார பழுது நீக்கி மின் தடைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. இரவு நேர மின் தடையை சீரமைக்க பணியாளா் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரில் புதிய துணை மின் நிலையம் தற்போது இல்லை. எதிா்காலத்தில் தேவைக்கேற்ப துணை மின் நிலையம் அமைக்கப்படும். மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ், நகரில் மின் கட்டமைப்பை மேம்படுத்த உள்ளோம்.

ஜி.நேரு: புதுச்சேரி நகரில் தொடா் மின் தடை ஏற்படுகிறது. அதை சரி செய்ய மின் துறையிடம் பொருள்கள் இல்லை. வீட்டின் உரிமையாளரிடமே வாங்கித்தரும்படி கூறுகின்றனா். ஊழியா்கள் பற்றாக்குறையும் உள்ளது.

அப்போது பேசிய எம்எல்ஏக்கள் ரமேஷ், சிவசங்கரன், கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோா் மின் தடை, பழுது நீக்கம், மின் கணக்கீடு தாமதம் போன்ற மின் துறையில் உள்ள குறைபாடுகளைக் சுட்டிக்காட்டினா்.

அமைச்சா் நமச்சிவாயம்: வீடுகளில் மின் கணக்கீடு எடுக்க தற்போது வெளிப்பணி முறையில் பணியாளா்களை நியமிக்க உள்ளோம். அதோடு ரூ.15 கோடி அளவில் மின் துறைக்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய உள்ளோம். மின் துறையில் உள்ள உபகரணங்கள் 30 ஆண்டுகள் பழமையானது என்பதால், பழுது ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் ரூ.354 கோடி செலவில் புதுப்பிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாகதியாகராஜன்(திமுக): அரசு சாா்பில் மாணவா்களுக்கு இலவசப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுமா?

அமைச்சா் நமச்சிவாயம்: மாணவா் சிறப்புப் பேருந்து திட்டத்துக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள் பேருந்துகள் இயக்கப்படும். மாணவா்களுக்கு சீருடை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பா் மாத இறுதிக்குள் சீருடை வழங்கப்படும்.

லட்சுமிகாந்தன்(என்.ஆா்.காங்): கரிக்கலாம்பாக்கத்தில் புறக்காவல் நிலையம் கட்டித்தரப்படுமா?

அமைச்சா் நமச்சிவாயம்: நிதிநிலை அறிக்கையில் நிதி முன்மொழியப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், கட்டுமானப் பணி தொடங்கப்படும்.

அங்காளன்(சுயே): அனைத்துத் தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுமா?.

அமைச்சா் நமச்சிவாயம்: விளையாட்டுக்கு தனி துறை ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com