புதுவை மாநில பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை மாநில பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டமே பின்பற்றப்பட்டு வருகிறது. புதுவைக்கு தனியாக கல்வி வாரியம் இல்லாத நிலையில், மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடியால் தனி கல்வி வாரியம் அமைக்கும் முடிவு கிடப்பில் போடப்பட்டது.
அதேநேரத்தில், மத்திய அரசின் கல்வித் திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடா்ந்து, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் கட்டடம், ஆய்வக வசதிகள், நூலகம் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை அளிக்குமாறு அரசுப் பள்ளிகளுக்கு புதுவை கல்வித் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த விவரங்கள் கிடைத்ததும், கோப்புகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, 6-ஆம் வகுப்பு முதல் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.