சமுதாய வளா்ச்சி குறியீட்டில் முதலிடம்:பிரதமருக்கு புதுவை ஆளுநா் நன்றி
By DIN | Published On : 22nd December 2022 02:29 AM | Last Updated : 22nd December 2022 02:29 AM | அ+அ அ- |

சமுதாய வளா்ச்சி குறியீடுகளில் நாட்டிலேயே புதுவை முதலிடம் பிடித்ததற்கு உறுதுணையாக இருந்ததாக, பிரதமா் மோடிக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவுக்கு அண்மையில் அளிக்கப்பட்ட சமுதாய வளா்ச்சி அறிக்கை செவ்வாய்க்கிழமை (டிச.20) வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், 2011-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுதந்திரமான செயல்பாடு, வீட்டு வசதி, குடிநீா் மேலாண்மை, துப்புரவு போன்ற சமுதாய வளா்ச்சி குறியீடுகளில் புதுவை மாநிலம் 100 புள்ளிகளுக்கு 65.99 புள்ளிகள் பெற்று, மாநிலங்கள் அளவில் நாட்டிலேயே புதுவை முதலிடத்தைப் பெற்றது.
இத்தகைய சிறப்பான வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவரும் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா், மத்திய அரசுக்கு புதுவை மக்களின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.