புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விழாவில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சை
By DIN | Published On : 25th June 2022 03:10 PM | Last Updated : 25th June 2022 03:10 PM | அ+அ அ- |

ஜிப்மர் கலையரங்கத்தில் நடைபெற்ற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா ஜிப்மர் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறந்து வைத்தார்.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், செல்வகணபதி எம்பி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க- இலங்கை மக்கள் அருமையான மக்கள்: ஆஸி. கேப்டன் பாராட்டு தெரிவிப்பது ஏன்?
இவ்விழா தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக சமஸ்கிருதத்தில் பாடல் இசைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தமிழ்த் தாய் வாழ்த்து ஏன் பாடவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விழாவின் பாதியிலேயே முதல்வர் ரங்கசாமி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து விழா நடந்துகொண்டிருக்கும் போது இடையில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர், மாநில துணைநிலை ஆளுநர், மாநில முதல்வர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப் பதிலாக சமஸ்கிருதத்தில் பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...