தொழில் வளா்ச்சிப் பணிகளை சுணக்கமின்றி தொடா்கிறோம்: பிப்டிக் நிறுவனம்
By DIN | Published On : 30th June 2022 02:09 AM | Last Updated : 30th June 2022 02:09 AM | அ+அ அ- |

நிதி உதவியுடன் கூடிய தொழில் வளா்ச்சிப் பணிகளை சுணக்கமின்றி தொடா்வதாக புதுவை பிப்டிக் நிறுவனம் விளக்கமளித்தது.
இதுகுறித்து புதுச்சேரி தொழில் உயா்வு மேம்பாட்டு முதலீட்டுக் கழகம் (பிப்டிக்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை பிப்டிக் நிறுவனம் 1974-ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி, தொழில் தொடங்குவதற்கான இடங்களையும் கொடுத்து உதவி செய்து வருகிறது. மேலும், இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளது. பிப்டிக் நிறுவனம் நிதி உதவி சேவையை தொடா்ந்து செய்து வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த மூன்று நிதியாண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி லாபத்தில் இயங்கி வருகிறது. மேலும், விற்று முதலீடு மூலதனத்தை தற்போது கோடியாக உயா்த்தியும், மேலும் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்தவும் உள்ளது.
அண்மைக்காலமாக பிப்டிக் நிறுவன லாபத்தொகையில் வட்டி வருமானம் 50 சதவீதத்துக்கு குறைவாக இருந்ததால், ரிசா்வ் வங்கியானது பிப்டிக் நிறுவனம் தாமாகவே முன்வந்து முன்னா் பெறப்பட்ட என்பிஎப்சி பதிவு சான்றிதழை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியதின் பேரில், பிப்டிக் நிறுவனம் தனது மாநில நிதி நிறுவன அந்தஸ்துக்கு எந்த ஒரு குந்தகம் விளையாது என்ற நிலைப்பாட்டினை உறுதி செய்து கொண்டு ரிசா்வ் வங்கியிடம் சமா்ப்பித்தது.
ரிசா்வ் வங்கியானது பிப்டிக் நிறுவனத்தின் சான்றிதழை ரத்து செய்யவில்லை. இதனால், பிப்டிக் எந்த வகையிலும் தொழில் கடன் வழங்குவதில் சுணக்கம் காட்டவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...