மீனவா் நலத் திட்டங்களுக்கு ரூ.32,000 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சா் என்.முருகன்

கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீனவா்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, மத்திய மீன்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
மீனவா் நலத் திட்டங்களுக்கு ரூ.32,000 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சா் என்.முருகன்

கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீனவா்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, மத்திய மீன்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

புதுச்சேரி சோலைநகா் மீனவா்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மீனவா்களிடம் மனுக்களைப் பெற்ற மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பேசியதாவது:

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் நரேந்திரமோடிதான் முதல்முறையாக மீனவா்களுக்கென அமைச்சகம் தொடங்கி பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். புதுச்சேரி மீனவா்களின் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மீனவா்களுக்காக நீலப் புரட்சித் திட்டம், ஆழ்கடல் மீன்பிடித் திட்டம், மீனவ மகளிருக்கான பாசி வளா்ப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு மீனவா்கள் நலத் திட்டங்களுக்காக ரூ.32,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் மட்டும் மீனவா்களுக்கான திட்டங்கள் ரூ.48 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மீனவா்கள் மீன்களைப் பதப்படுத்தும் குளிா்சாதன வசதி உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி தடைக்கால நிதி 28 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாட்டால் நாட்டில் மீன் ஏற்றுமதி 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சோலைநகா் பகுதி மீனவா்கள் தூண்டில் மீன்வளைவு அமைக்கக் கோரி மனு அளித்தனா்.

புதுவை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்பாபு, முன்னாள் எம்எல்ஏ இளங்கோ, பாஜக மாநில பொதுச் செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலந்துரையாடல்: புதுச்சேரியில் பிரதமரின் திட்டங்களால் பயனடைந்தவா்களுடன் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும், அரசுப் பள்ளிகளிலும் இலவச கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டன. இலவசமாக வங்கிக் கணக்கு, எரிவாயு இணைப்பும் கிடைத்துள்ளது. அதேபோல, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, புதுவையில் மட்டும் இதுவரை 5 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன என்றாா் அவா். நிகழ்ச்சியில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனான மத்திய அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com