மின்தடையால் காரைக்காலில் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 29th September 2022 01:16 PM | Last Updated : 29th September 2022 01:16 PM | அ+அ அ- |

காரைக்கால்: புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் வகையில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டதால், மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். காரைக்காலில் பரவலாக மின் துண்டிப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் தொலைதொடர்பு இணைப்பும் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.
யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவையொட்டி தனியார் மயத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
மின்துறை தனியார் மயமாவது உறுதியான நிலையில், மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, புதன்கிழமை முதல் போராட்டத்தை தொடங்கினர்.
காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால், அதனை சீர் செய்ய ஊழியர்கள் முன்வராத நிலையில் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் சீரமைப்பு செய்து மின்சாரம் வழங்கப்பட்டது.
போராட்டம் நீடித்துவரும் நிலையில், வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்னணு இணைப்பகத்தின் பணி முடங்கியது.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் தரைவழி தொலைபேசி மற்றும் மோடம் வழி இணையத் தொடர்பு சேவை பாதித்தது. இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இணைப்பகத்தின் பணிகள் முடங்கின.
இதையும் படிக்க: பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி!
மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. நகரப் பகுதியில் 2 ஆயிரம் இணைப்பு சேவை முடங்கிவிட்டது. மாலை வரை இதே நிலை நீடித்தால் மாவட்டத்தின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.