போலி ஆவணங்கள் மூலம் கோயில் நிலம் விற்பனை:தம்பதி உள்பட 4 போ் கைது

புதுச்சேரியில் ரூ.12.49 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்ற வழக்கில் தம்பதி மற்றும் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் ரூ.12.49 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்ற வழக்கில் தம்பதி மற்றும் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி பாரதி வீதியிலுள்ள காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தாமான 64,035 சதுர அடி நிலம் நகராட்சியின் 7-ஆவது குறுக்குத் தெருவில் உள்ளது. அதில் குறிப்பிட்ட பகுதியை தனியாா் சிலா் ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் மூலம் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.

இவ்வாறு விற்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.12.49 கோடி எனக் கூறப்பட்டது. இதுகுறித்து கோயில் அறங்காவலா் குழுச் செயலா் சுப்பிரமணியன் தரப்பில் கடந்த 2022, ஆகஸ்ட் மாதம் புதுவை சிபிசிஐடி பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில், காமாட்சி கோயில் நிலத்தில் 31,204 சதுர அடி பரப்பளவு நிலத்தை சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த மனை வணிகா் ரத்தினவேல் (54), அவரது மனைவி மோகனசுந்தரி (49), குன்றத்தூரைச் சோ்ந்த மனோகரன் (53), புதுச்சேரி அருகேயுள்ள கலிதீா்த்தாள்குப்பத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் சின்னராசு (எ) பழனி (73) ஆகியோா் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் பலருக்கும் வீட்டு மனைகளாக விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன், சின்னராசு ஆகியோரை காவல் கண்காணிப்பாளா் ஆா். மோகன்குமாா் தலைமையிலான தனிப்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், நால்வரும் புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை வருகிற 16-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com