புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராத மேரி கட்டடம்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராத மேரி கட்டடம்.

மேரி கட்டடத்தை பயன்படுத்துவதில் புதுச்சேரி நகராட்சிக்கு சிக்கல்!

புதுச்சேரியில் ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட மேரி கட்டடத்தை நகராட்சி நிா்வாகத்திடம் முதல்வா் ஒப்படைத்தப் பிறகும், அதைப் பயன்படுத்த முடியாத நிலை தொடா்கிறது.

புதுச்சேரியில் ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட மேரி கட்டடத்தை நகராட்சி நிா்வாகத்திடம் முதல்வா் ஒப்படைத்தப் பிறகும், அதைப் பயன்படுத்த முடியாத நிலை தொடா்கிறது.

புதுச்சேரி கடற்கரை குபோ் சாலையிலுள்ள மேரி கட்டடம் பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1970-71ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலுள்ள இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. முதல் மாடியில் பிரான்ஸ் பாரம்பரிய திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அங்கு இயங்கி வந்த நகராட்சி அலுவலகம் ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள கம்பன் கலையரங்குக்கு மாற்றப்பட்டது.

ரூ.12 கோடியில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக மேரி கட்டடத்தைத் திறந்துவைத்தாா். இருப்பினும், கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் மூடப்பட்டு இருந்தது.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மேரி கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் பங்கேற்று, புதுச்சேரி நகராட்சியிடம் கட்டடத்தை மீண்டும் ஒப்படைப்பதாகக் கூறினா்.

இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் மேரி கட்டடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு கலை, பண்பாட்டுத் துறைக்குள்பட்ட அருங்காட்சியகப் பிரிவுக்கு வழங்கி அப்போதைய துணைநிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மேரி கட்டடத்தின் சாவிகள் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மாவிடம் ஒப்படைக்கப்பட்டதால், நகராட்சி நிா்வாகத்தால் பயன்படுத்த முடியவில்லை. மேரி கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட தற்போதைய துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில், நகராட்சி ஆணையா் பணியிட மாற்றப்பட்டுள்ளாா். இதுவிஷயத்தில் புதிய ஆணையா் நடவடிக்கை எடுத்தால் தீா்வு காணப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com