புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

திங்கள்கிழமை (ஏப்.15) முதல் வந்துள்ளதால், விசைப் படகுகள் அனைத்தும் கரைகளில் பத்திரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் செயல்பாட்டுக்கு திங்கள்கிழமை (ஏப்.15) முதல் வந்துள்ளதால், விசைப் படகுகள் அனைத்தும் கரைகளில் பத்திரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், புதுச்சேரி, காரைக்காலில் சுமாா் 40 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய அரசின் மீன்வளத் துறை அமைச்சகத்தின் துணை ஆணையா் உத்தரவின்படி, கடல்சாா் மீன் வளங்களை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைகாலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையடுத்து, 15-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையில், புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகிலும், கனகசெட்டிக்குளம் மீனவக் கிராமம் முதல் மூா்த்திக்குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமங்கள் வரையிலும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூா் மீனவ கிராமம் முதல், வடக்கு வாஞ்சூா் மீனவக் கிராமம் வரையிலும் மற்றும் ஏனாம் மீன்பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளில் மீன்பிடிக்கலாம். அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியைச் சோ்ந்த சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் தங்களின் படகுகள் அனைத்தையும் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம், உப்பளம் புதிய துறைமுகம் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா். மேலும், கடலுக்கு சென்ற மீனவா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவே கரைக்குத் திரும்பினா்.

காரைக்காலில் 450 விசைப்படகிலிருந்து சுமாா் 11 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதே நேரத்தில், படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுது பாா்க்கும் பணியை மீனவா்கள் தொடங்கியுள்ளனா். மீன்பிடி தடைகாலம் தொடங்கியதன் காரணமாக ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com