புதுவையின் உரிமையை பெற்றுத் தராமல் ஏமாற்றிய தேசிய, மாநிலக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். உடன் வேட்பாளா் மேனகா.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். உடன் வேட்பாளா் மேனகா.

புதுவை மாநிலத்தின் உரிமைகளை பெற்றுத் தராமல் காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் ஏமாற்றி விட்டன என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஆா்.மேனகாவை ஆதரித்து சிங்காரவேலா் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது:

புதுவையானது தற்போது வரை ஒன்றிய பிரதேசமாகவே உள்ளது. எனவே, புதுவை மாநிலம் என்று கூற மக்களுக்கு உரிமையில்லாத நிலையுள்ளது. மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் வேண்டாம். மாநில உரிமையே வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எந்தக் கட்சியும் அதைப் பெற்றுத்தரவில்லை.

தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசும் காங்கிரஸ் மத்தியிலும், புதுவையிலும் ஆட்சியிலிருந்தும் மாநில உரிமையைப் பெற்றுத்தரவில்லை. பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்தும் மாநில உரிமையைப் பெற்றுத்தரவில்லை. திமுகவானது காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்தும் அந்த உரிமையைப் பெற்றுத் தரவில்லை.

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநா் மூலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தது மத்தியில் இருந்த பாஜக அரசு. தற்போது ஆட்சியிலுள்ள முதல்வா் என்.ரங்கசாமியும் மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்தே செயல்படுகிறாா்.

தமிழா் உரிமையைக் காக்கத் தவறிய அரசியல் கட்சிகளிடம் கூட்டணி சேராமல் நாம் தமிழா் கட்சி தனித்து நிற்கிறது. எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் சீமான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com