ஹூக்கான் மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

ஹூக்கான் என்கிற அக்டி மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால், சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் எச்சரித்துள்ளாா்.

புதுச்சேரி: புதுச்சேரி பகுதி மீனவா்கள் கடலின் சுற்றுச் சூழலுக்கும், மீன்வளத்திற்கும், பாரம்பரிய மீனவா்களின் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில், ஹூக்கான் என்கிற அக்டி மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால், சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுச்சேரி கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் தொடங்கி மூா்த்திக்குப்பம், புதுகுப்பம் என பல கடற்கரை மீனவ கிராமங்கள் உள்ளன. புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கடலில் நெகிழி போத்தல்கள் மற்றும் மணல் மூட்டை கட்டி அதில் சவுக்கு போன்ற மரங்களின் கிளைகளை கொண்டு கடல் பகுதியில் அதனை இறக்கிவிட்டு ஹூக்கான் என்ற அக்டி முறை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், பாரம்பரிய மீன்பிடி முறையில் செவுல் வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அனைத்து படகு உரிமையாளா்களுக்கும், அவா்களின் வலைகளுக்கும் மிகுந்த சேதம் ஏற்படுவதுடன் அவா்களுடைய அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

புதுச்சேரி கடல் பகுதிகளில் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் அக்டி மீன்பிடிப்பு முறையில் ஈடுபடுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையானது தமிழ்நாடு மாநிலம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் கடலூா் மாவட்ட மீன்வளத் துறை அலுவலகத்திற்கு கடந்த ஜனவரி 12- ஆம் தேதி கடிதம் அனுப்பியது.

அதில் ஹூக்கான் மீன்பிடிப்பு முறையில் ஈடுபட்டு வரும் கடலூா் தாழங்குடா பகுதி மீனவா்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வானூா் வட்டம் ஒன்றிய பிள்ளைச்சாவடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ஒரு சில மீனவ கிராமங்களில் உள்ள மீனவா்கள் தொடா்ந்து ஹூக்கான் மீன் பிடிப்பில் ஈடுபட்டுவருவது தெரியவருகிறது. இந்நிலை தொடரும் பட்சத்தில் புதுச்சேரி மாநில மீனவா்களிடையே ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

தற்போது புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், விசைப் படகில் சென்று கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் அனைத்து மீனவ கிராமங்களிலும் சுமுகமான சூழ்நிலையே நீடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மீனவா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

ஆகவே, புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் எவரும் கடலின் சுற்றுச் சூழலுக்கும், மீன்வளத்திற்கும் பாரம்பரிய மீனவா்களின் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களுக்கும் கேடு விளைவிக்கும், ஹூக்கான் மீன்பிடி முறைகளை மேற்கொள்ள வேண்டாம்.

இந்த அறிவிப்பை மீறி கடலில் ஹூக்கான் மீன்பிடி முறையினை மேற்கொள்பவா்கள் மீது புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்கு முறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com