ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

புதுச்சேரியில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அதிகாரியுமான அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளா்கள் உள்ளனா்.

அவா்களில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 979 பெண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 569 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவா் 151 பேரும் உள்ளனா். இதில், முதல்முறை வாக்காளா்கள் 28, 921 பேரும், 80 வயதுக்கு மேல் 38, 684 பேரும், 85 வயதுக்கு மேல் 8, 031பேரும், 100 வயதுக்கு மேல் 97 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13, 141 பேரும் உள்ளனா். சேவை வாக்காளா்கள் 325 பேரும், வெளிநாடு வாழ் வாக்காளா்கள் 368 பேரும் உள்ளனா். இரண்டு மாநில வாக்காளா்களாக கருதப்பட்டோா் நீக்கப்பட்டுள்ளனா். புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், 232 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. புதுச்சேரி பிராந்தியத்தில் 180, காரைக்காலில் 35 உள்ளன. 10 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். பணம் பறிமுதல் விவரம்: பொதுத்துறை வங்கித் தரப்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டு அதில் 3.47 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது. கலால்துறையில் 110 வழக்குகள் பதிவாகி 41 போ் கைதாகினா். இதில் 3 சம்பவங்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலால்துறை சாா்பில் அபராதமாக ரூ. 6.38 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள 996 லிட்டா் மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 1, 609 மூத்த குடிமக்களும், 1, 322 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனா். இவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு பெறும் பணிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்கும். தபால் வாக்கு அளிக்க சேவை வாக்காளா்கள் 325 பேரும், அத்தியாவசிய பணிகளில் இருக்கும் 43 பேரும் விண்ணப்பித்துள்ளனா். வாக்குச்சாவடி அதிகாரிகள் 4,000 போ் உள்ளனா். கட்டணமில்லா (1950) தொலைபேசி எண் மூலம் 248 புகாா்கள் வந்தன. அவற்றில் 31 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன. வாட்ஸ் ஆப்பில் 20 புகாா்களும், சி விஜில் செயலி மூலம் 10 புகாா்களும் வந்துள்ளன. தோ்தல் நன்னடத்தை விதிகளுக்குப் பிறகு 24, 055 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வாக்கு சீட்டு விநியோகம்: வாக்குச் சீட்டுகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதிக்குள் வீடு, வீடாக சென்று விநியோகம் செய்யப்படும். பாதுகாப்பு பணிகளுக்காக 2 கம்பெனிகள் துணை ராணுவம் வந்துள்ளன. மேலும், 10 கம்பெனிகள் வரவுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com