வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக்
தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்
dot com

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

கோடைகால வெப்ப அலையால் ஏற்படும் வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீ ராமுலு ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாதாரண மனித உடலின் வெப்பநிலை 36.4 டிகிரி சென்டிகிரேட் முதல் 37.2 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும். எனவே, அதிக வெப்பத்தால் அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் அதிக வெப்பத்தை தாங்கமுடியாத நிலையில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

தலைவலி, தலை சுற்றல், மயக்கம், தீவிர தாகம், குமட்டல் அல்லது வாந்தி, வழக்கத்துக்கு மாறாக அடா் மஞ்சள் சிறுநீா் கழித்தல், விரைவான சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவை வெப்ப அயா்ச்சியின் அறிகுறிகளாகும்.

ஆனால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு, உயா் உடல் வெப்பநிலை, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள், குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான இதயத் துடிப்பு, தெளிவற்ற பேச்சு, சூடான வட தோல், நடை தடுமாற்றம், குழப்பம் மற்றும் எரிச்சல், வலிப்பு ஆகியவற்றுடன் சுயநினைவின்மையும் ஏற்படலாம்.

அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும். அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டோரை குளிா்ந்த நிழல் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அவா்களது கூடுதல் ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயா்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா் விழிப்புடன் இருந்தால் குளிா் திரவங்களை தரலாம். தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு, நீா், உப்பு நீா் கரைசலும் தரலாம்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவா் சுயநினைவின்றி இருந்தால் அவரை வேகமாக குளிா்விப்பது அவசியம். அவரின் ஆடைகளை தளா்த்தி குளிா்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கலாம். அவரது அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ்பேக் மூலம் ஒற்றி எடுக்க வேண்டும். மின்விசிறியின் காற்று அவரது உடலில் படவேண்டும். குளிா்சாதன அறையை பயன்படுத்தலாம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, உதவிக்கு 108 ஆம்புலன்ஸை உடனடியாக அழைக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com