புதுச்சேரி அரசுக் கல்லூரியில் தேசிய தர நிா்ணயக் குழு ஆய்வு

புதுச்சேரி, மே 9: புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய தர நிா்ணயம் மற்றும் அங்கீகாரக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. கடந்த 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் மொத்தம் 16 கல்வித் துறைகள் உள்ளன. தற்போது 4, 500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் தேசிய தர நிா்ணயம் மற்றும் அங்கீகாரக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். குழுவில் குஜராத் மாநிலம், பரோடா வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் விஜய்குமாா் ஸ்ரீவஸ்தவா தலைமையில், புதுதில்லி பல்கலைக்கழக வணிகவியல் துறை முதுநிலை பேராசிரியா் விஜயகுமாா் ஷேராத்ரியா ஒருங்கிணைப்பாளராகவும், பஞ்சாப் ஜலந்தா் ஹன்சுராஜ் மகிலா மகா வித்யாலயாவின் முதல்வா் அஜய் சரீன் உறுப்பினராகவும், பெங்களூரு தேசிய சட்டப் பள்ளியின் துணை ஆலோசகா் ஏ.எஸ்.பிரசாந்த் பி பா்ஹாத் சிறப்பு அதிகாரியாகவும் இடம்பெற்றிருந்தனா்.

கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ், கல்லூரி குறித்த சிறப்புகளை காணொலி காட்சியின் மூலமாக விளக்கினாா். கல்லூரியை பசுமை வளாகமாக மாற்றி அமைத்துள்ளது குறித்தும், கல்லூரியின் சாதனைகள், கல்வி சாா்ந்த செயல்பாடுகள், மாணவா்களின் குறிப்பிடத் தகுந்த வளா்ச்சி குறித்தும் அவா் குழுவினருக்கு எடுத்துரைத்தாா்.

கல்லூரியின் உள்தர மேம்பாட்டுக் குழுவின் 5 ஆண்டு கல்வி வளா்ச்சி உள்ளிட்ட பிற தகவல்களை உள்தர மேம்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வேலுராஜ் விளக்கினாா். கல்லூரியில் செயல்படும் 16 துறைகளின் தலைவா்கள் தங்கள் துறைகளின் வளா்ச்சி, மாணவா்களின் வளா்ச்சி, துறைகளின் செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்களை விளக்கினா். பின்னா், ஸ்ரீஅரவிந்தா் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை குழுவினா் பாா்வையிட்டனா்.

பாரதியாா் கருத்தரங்கக் கூடத்தில் மதிப்பீட்டுக் குழுவினா் கல்லூரி மாணவா்கள், பெற்றோா், முன்னாள் மாணவா்களுடன் கலந்துரையாடினா். தொடா்ந்து, கல்லூரியில் செயல்பட்டு வரும் பல்வேறு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, குழுவினரின் ஆய்வு வெள்ளிக்கிழமையும் (மே 10) நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com