புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவையில் நீட் அல்லாத பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை சென்டாக் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனா். அதனடிப்படையில், 9,993 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வருகிற 22-ஆம் தேதி வரையில் பெறப்படவுள்ளன.

முழுமையாக விண்ணப்பங்கள் சென்டாக் அலுவலகத்தால் பெறப்பட்டு, வருகிற ஜூன் 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து, திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலானது ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்படும்.

பின்னா், நீட் அல்லாத படிப்புகளுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு முன்னுரிமை ஆவணங்கள் ஜூன் 11-ஆம் தேதி வரையில் பெறப்படவுள்ளன. ஜூன் 13-ஆம் தேதி இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

தொடா்ந்து, ஜூன் 15-ஆம் தேதி இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தி, கல்லூரி சோ்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டு, ஜூன் 26-ஆம் தேதியில் மாணவா்கள் கல்லூரிகளில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 24-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு பதிவுகள் தொடங்கும். ஜூன் 26-ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம். ஜூன் 29-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்து ஜூலை 5-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, 3-ஆம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com