காளமேகப் புலவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?

ஆசுகவி என்றழைக்கப்பட்ட காளமேகப் புலவருக்கு எண்ணாயிரம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆசுகவி என்றழைக்கப்பட்ட காளமேகப் புலவருக்கு எண்ணாயிரம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

விழுப்புரம்-செஞ்சி சாலையில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் வலது பக்கம் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது எண்ணாயிரம். இக் கிராமத்தில் எட்டாயிரம் சமண முனிவர்கள் வாழ்ந்ததால் இந்த ஊர் எண்ணாயிரம் என்ற பெயர் பெற்றதாக இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலேடையில் கவி பாடுவதில் வல்லவரான காளமேகப் புலவர், இக் கிராமத்தில் பிறந்ததாக இப் பகுதி மக்கள் கூறுகின்றனர். காளமேகப் புலவர் பிறந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம், கும்பகோணம் அருகே உள்ள நந்திகிராமம் என்ற இருவிதமான கருத்துகள் ஏற்கெனவே ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளன. ஆனால் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் கல்வெட்டுகளில் காளமேகப் புலவர் பிறந்த ஊர் எண்ணாயிரம் என்பதற்கு ஆதாரமாக சில பாடல்கள் இருப்பதாகவும், அவர் எங்கள் கிராமத்தில்தான் பிறந்தார் என்றும் இக் கிராமத்தில் உள்ள தமிழார்வலர்கள் உறுதியுடன் நம்புகின்றனர்.

வரதன் என்ற இயற்பெயர் கொண்ட காளமேகப் புலவருக்கு இடைவிடாது பொழியும் கார்மேகம் போல் கவிபாடும் வல்லமை கொண்டதால் இவர் காளமேகம் என்று அழைக்கப்பட்டார். வசைகவி, ஆசுகவி என்ற புனைப்பெயர்களும் இவருக்கு உண்டு.

இவர் முதலில் வைணவத்தை பின்பற்றி பின்னர் சைவராக மாறியவர். இவர் திருமலைராயன் அவையில் தலைமைப் புலவராக இருந்த அதிமதுரகவியோடு வாதிட்டு வென்று புகழ்பெற்றார்.

இவரின் திருவானைக்கா உலா, திருவானைக்கா சரஸ்வதி மாலை, சமுத்திர விலாசம், சித்திரமடல், பரப்பிரம்ம விளக்கம், புலவர் புராணம், பெருந்தொகை உள்ளிட்ட படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவர் பிறந்ததாகக் கூறப்படும் எண்ணாயிரத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காளமேகப் புலவரின் புகழைப் பரப்பும் வகையில் இக் கிராமத்தில் இவருக்கு ஒரு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழார்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இப் பகுதியில் கவி காளமேகம் பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் டி.வி.செல்வராஜ் என்பவர் கூறுகையில் நாங்கள் எங்கள் கிராமத்தில் காளமேகப் புலவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம்.

காளமேகப் புலவர் பிறந்த ஊர் குறித்து இருவேறு கருத்துகள் இருந்தாலும், காஞ்சிபுரத்தில் உள்ள கல்வெட்டில் எண்ணாயிரத்தில் காளமேகப் புலவர் பிறந்தார் என்பதற்கான பாடல் உள்ளது. எனவே அவருக்கு எங்கள் கிராமத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் சில தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், காளமேகப் புலவர் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகளில் அவர் குறித்த குறிப்புகளை மாவட்ட நிர்வாகம் வைக்க வேண்டும், தமிழ் ஆர்வலர்கள் கம்பன் விழாவைப் போல் காளமேகப் புலவருக்கும் விழா எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com