பணமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகும்: விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

தமிழகத்தில் விவசாய விளைபொருள்கள் விற்பனை மையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ்,

தமிழகத்தில் விவசாய விளைபொருள்கள் விற்பனை மையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், விழு ப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாதிரி மையமாக தயாராகி வருகிறது.
 மின்னணு முறையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்கான சலுகைகளையும் வழங்கி வருகிறது.
 இந்தத் திட்டத்தை விவசாயிகள் அங்கம் வகிக்கும் வேளாண் பொருள் விற்பனைத் துறையிலும் செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (மார்க்கெட் கமிட்டி) உள்ளன.
 இவற்றில், "இ-நாம்' எனப்படும் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களாக 100 விற்பனை மையங்கள் தயாராகி வருகிறது.
 இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஆன்லைன் முறையில் ஒருங்கிணைத்து, அந்தந்த விற்பனைக் கூடங்களின் சந்தை நிலவரங்கள், பொருள்களின் தினசரி விலை, முக்கிய பொருள்கள் வரத்து, வானிலை நிலவரங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.
 இதற்கான தனி செல்லிடப்பேசி செயலியும் கொடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய தகவல் அளிக்கப்படுகிறது. இதன்மூலம், சந்தையின் நிலவரத்தையறிந்து விளைபொருள்களை விவசாயிகள் வழங்க முடியும். தமிழக அரசும் "இ-டிரேடிங்' என்ற கணினி திட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒருங்கிணைத்து வருகிறது.
 இந்த நிலையில், மத்திய அரசு அறிவிப்பின்படி பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள, மாநிலத்தில் உள்ள அனைத்து ஒழங்குமுறை விற்பனைக் கூடங்களையும் தயார்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 இதில், முன்னோடியாக பணத்தையே பயன்படுத்தாமல் விற்பனையை மேற்கொள்ளும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை தயார்படுத்தி வருகின்றனர்.
 இதற்காக, தமிழக அளவில், விழுப்புரம் ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தை பணமில்லா பரிவர்த்தனைக் கூடமாக செயல்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
 இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட விற்பனைக் குழுவின் செயலர் சங்கர் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில், 17 விற்பனைக் கூடங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருள்களுக்கு, வியாபாரிகள் தங்குதடையின்றி பணபரிவர்த்தனை செய்யவும், இந்த நடவடிக்கையில் குறைபாடுகளைத் தவிர்க்க, இனி வங்கிக் கணக்கு மூலமே பணப்பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சின்னசேலம், அவலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விற்பனைக் கூடங்களில், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய தொகையை, வியாபாரிகள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகள் வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் எண், செல்லிடப் பேசி எண்களை வழங்க வேண்டும். வியாபாரிகளின் வங்கிக் கணக்கு எண்களும் பெறப்பட்டு வருகிறது.
 இந்த முறையில், கடந்த ஒரு வார காலமாக, விளைபொருள்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
 அதிக தொகைகள், விவசாயிகளுக்கு காசோலை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னோடியாக, தமிழக அளவில் விழுப்புரம் விற்பனைக் குழுவை செயல்படுத்த விற்பனைக் குழு ஆணையர் உத்தரவின் பேரில் தயார்படுத்தி வருகிறோம்.
 வியாபாரிகள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு கருத்துகள் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, வங்கியாளர்களே நேரடியாக வந்து வங்கிக் கணக்கு தொடங்கி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 விழுப்புரம் விற்பனைக் கூடத்தை வருகிற ஜனவரி முதல் முற்றிலும் பணமில்லாத மண்டியாக மாற்ற திட்டம் வகுத்து பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகள் பொருள்களை விற்பனைக்கு வழங்கியவுடன், பணத்துக்காக மாலை வரை காத்திருக்காமல், தங்கள் பணிகளை கவனிக்கச் செல்லலாம். விற்பனையானவுடன் அதற்கான தொகை, அவரது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட பிடித்தமில்லாமல் சேர்ந்துவிடும்.
 இடைத் தரகர்கள் ஏமாற்றுவது போன்றவை இருக்க வாய்ப்பில்லை. ரொக்கமாக பெரிய தொகையை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. வியாபாரிகளும் லட்சக்கணக்கில் பணமாக வைத்திருக்க வேண்டாம்.
 இந்தப் பணத்தை எடுக்க, விற்பனைக் கூடத்தில் ஏடிஎம் மையங்களும் நிறுவப்பட உள்ளது.
 இந்தத் திட்டத்தில், மேலும், விளைபொருள்களை நேரடியாக, சுத்தம் செய்து, தரம்பிரித்து எடைபோடும் மின்னணு இயந்திரமும் விரைவில் வர உள்ளது. இதனால், எடை பிரச்னை, சாக்கு மாற்றுவதில் கூலி பிரச்னை போன்றவையும் தடுக்கப்படும்.
 இந்தத் திட்டத்தில் சேர்ந்திட விவசாயிகள் வங்கிக் கணக்கு தொடங்கியிருந்தால் போதும். அவர்களுக்கு விரைவில் (ஸ்மார்ட் கார்டு) பிரத்யேக அட்டை வழங்கப்பட்டு அதன்மூலம் பணப்பட்டுவாடா, விற்பனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com