பாழாகிவரும் பழங்கால சின்னங்கள்! விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பழங்கால சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகல்கள், ஓவியங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பழங்கால சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகல்கள், ஓவியங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், மக்கள் பார்வையிடவும் ஏதுவாக, விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், வரலாற்றுத் தொன்மை மிக்க அரிய கல்வெட்டுகள், கற்கால ஆயுதங்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், மரச்சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள், நடுகல்கள், மன்னர் காலத்தைய சாதனைகளைக் கூறும் கல் ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என்று ஏராளமான கலை, இலக்கிய, அறிவியல் சார் தொன்மைகள் பரவிக்கிடக்கின்றன.

எனினும் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பாக விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில், மரம் கல்லான விந்தையாக கல்மரங்கள் என போற்றி பாதுகாக்க வேண்டிய ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, இறந்தவர்களின் உடலை வைத்துள்ள வழிபாட்டுக் கல்கள் உடையாநத்தம், நாயனூரில் 22 அடி உயர வழிபாட்டுக் கல், தேவனூரில் கல் திட்டை, வட்டகல்கள் என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த சின்னங்கள் தொடர்கின்றன.

பாறை ஓவியங்கள்: கீழ்வாலையில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வரையப்பட்ட பாறை ஓவியங்கள் சிதையும் நிலையில் உள்ளன. செத்தவரை பாறை ஓவியங்கள், ஒதியத்தூர், ஆலம்பாடி பகுதிகளில் உள்ளன.

குடவறை கோயில்கள்: மலையைக் குடைந்து கோயில்களை ஏற்படுத்திய பல்லவர் காலத்தைய குடவறைக் கோயில்கள், மண்டகப்பட்டு, தளவானூர், சிங்கவரம் பகுதிகளில் அமைந்துள்ளன. பனமலைப்பேட்டையில் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவ மன்னரின் ஓவியங்கள் சிதைந்து வருகிறது.

கல்வெட்டுகள்: ஜம்பை, கோண்டூர் பகுதிகளில் மன்னன் அதியமானின் படையெடுப்பை குறிக்கும் சங்ககாலத்தைய கல்வெட்டுகள், திருநாதர்குன்று, ஊரணித்தாங்கல், எண்ணாயிரம் பகுதிகளில் சமண சமய படுகைகள் உள்ளன.

சிற்பங்கள்: கீழ்சேவூரில் துர்க்கையம்மன் சிற்பம் பிரசித்தம். தொண்டூரில் படுத்த நிலையில் பல்லவர் கால பெருமாள் சிற்பம், அரசூரில் அய்யனார் சிற்பம், எடுத்தவாய்நத்தம், தென்சிறுவலூர், செண்டியம்பாக்கம் பகுதியில் நடுகல்கள் உள்ளன.

பரிக்கல் பகுதியில் அண்மையில் முதுமக்கள் தாழியும், ஏனாதிமங்கலம் குமாரமங்கலம் பகுதியில் உறைகிணறுகளும், கீழ்சேவூரில் சுடுமண் குழாயும் கண்டுபிடிக்கப்பட்டது.

புகழ்மிக்க செஞ்சிக்கோட்டையும், திருவக்கரை சந்திரமௌலீஸ்வர் கோயில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், சுந்தரர் பாடிய பாடல் பெற்ற தலமான திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம் கிடங்கல் கோட்டை, சோழர், பல்லவர்கால கோயில்கள் என மாவட்டத்தில் வரலாற்று அடையாளங்கள் ஏராளமாக உள்ளன.

இது மட்டுமின்றி வரலாற்று ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்த இடமின்றி, தனியார் இடங்களிலும், பொது இடங்களிலும் கேட்பாரன்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டு வீணாகி வருகின்றன.

தவிர, புதிதாக கண்டெடுக்கப்படும் சிலைகள், புதையல்கள் போன்றவை காலம் காலமாக வெளிமாவட்ட அருங்காட்சியகங்களுக்குச் செல்வதால், விழுப்புரம் மாவட்ட மக்களும், இங்கு வரும் வெளியூர் மக்களும் பார்த்திராத வகையில் பழங்காலச் சின்னங்கள் சிதைந்து வருவதாக வரலாற்று ஆய்வர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரத்தில் கடந்த 1992-இல் பொதுப்பணித் துறை செயற்பொறியாளராக இருந்த கொடுமுடி கோவிந்தராஜன், தனது ஆர்வத்தால் அப்போது மாவட்டத்தில் கிடைத்த நடுகல், சிலைகளை, பொதுப்பணித் துறை வளாகத்தின் வெளியே உள்ள வெற்றிடத்தில் அருங்காட்சியகத்தை ஏற்படுத்தி பாதுகாப்பாக வைத்தார். ஆனால், அது பராமரிப்பின்றி கிடக்கிறது.

இதே போல், முண்டியம்பாக்கம் பகுதியிலும் திறந்த வெளியில் கற்சிலைகளும்,ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட திருவக்கரை கல்மரமும் பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக உள்ளன.

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று, வரலாற்று ஆய்வர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், கடந்த 2005இல் அப்போதைய ஆட்சியர் பாலச்சந்திரன் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதோடு சரி, அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளை பாதுகாக்கவும், அதனை பொது மக்களும் பார்த்து தெரிந்துகொள்வதற்கும் அருங்காட்சியகத்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நெடுங்காலத்தைய கோரிக்கை தொடர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com