மணலைத் திருடி கிராமங்களில் கொட்டி வைத்து விற்பனை!

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணலைத் திருடி, கிராமங்களில் கொட்டி வைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
மணலைத் திருடி கிராமங்களில் கொட்டி வைத்து விற்பனை!

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணலைத் திருடி, கிராமங்களில் கொட்டி வைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், மணல் வளம் வெகுவாகச் சுரண்டப்படுவதுடன், நிலத்தடி நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கீழக்கோண்டூர் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்குகிறது. இங்கு, விதிகளின்படி 2 இயந்திரங்கள் மூலம் தினசரி 300 முதல் 500 லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கும் இந்த குவாரியில் மட்டுமே மணல் வழங்கப்படுகிறது. சென்னை நகருக்கு தினமும் 5,000 லோடு மணல் தேவை உள்ள நிலையில், அங்கு லோடு மணல் ரூ.40 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த தேவையை சாதகமாக பயன்படுத்தி விழுப்புரம் பகுதியில் அரசு குவாரியை மீறி, ஏற்கெனவே குவாரி அமைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மணல் திருட்டு நடைபெறத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக, விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சிலர் திருட்டுத் தனமாக மணலை லாரிகளுக்கு ஏற்றி அனுப்புகின்றனர்.

அதேபோல மரகதபுரம், கண்டியமடை கிராமத்தில் ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வந்து, ஊருக்குள் உள்ள மைதானத்தில் கொட்டி வைத்து பட்டப் பகலிலேயே லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது.

இவை தவிர, விழுப்புரம் அருகே உள்ள சித்தாத்தூர், திருப்பாச்சனூர், தளவனூர் பகுதி ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்து வி.அரியலூர், கண்டமானடி, ஜானகிபுரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புப் பகுதியின் நடுவே குவித்து லாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

கண்டமானடி பகுதியில் உள்ள புதிய மனைவணிக காலியிடத்திலும், ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே உள்ள காலிமனைப் பகுதியிலும் மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றி வந்து கொட்டி வைத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றுகின்றனர். இதற்காக, இக்கும்பல் அதிகாரிகளை வளைத்துப் போட்டுக் கொள்வதாகவும், தடுக்க முயலும் கிராம மக்கள் தாக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

வியாழக்கிழமை இரவு ஜானகிபுரம் பகுதியில் குவித்து வைக்கப்பட்ட திருட்டு மணலை லாரிக்கு ஏற்றிய கும்பலை பிடிக்க முயன்ற கண்டமானடி கிராம விஏஓ நந்தகுமாரை, கும்பல் தாக்கி, செல்லிடப் பேசியை பறித்தது. இது தொடர்பாக, இருவரைப் பிடித்து விசாரித்து வரும் நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு மணல் விற்பனை தொடர்வதாக மக்கள் கூறுகின்றனர்.

திருப்பாச்சனூர், பிடாகம், மரகதபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே பலமுறை அரசு, தனியார் குவாரிகள் அமைத்து 30 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டது. இதனால் மணல் வளமும், நீர் வளமும் குறைந்ததால் குவாரிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு மணல் சுரண்டப்படுவதால், குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும், மணல் திருட்டு கும்பல், கிராம மக்கள் இடையே மோதல் எழும் சூழல் உள்ளதாக உளவுப்பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர். இதனைக் கண்காணித்து, மணல் திருட்டைத் தடுக்க வேண்டும், கிராம மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com