விக்கிரவாண்டியில் மேம்பாலம் கோரி கடைகளை அடைத்து உண்ணாவிரதம்: த.வெள்ளையன் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வர்த்தகர் சங்கத்தினர்,

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வர்த்தகர் சங்கத்தினர், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர், பொது மக்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விக்கிரவாண்டி அண்ணாசிலை எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் பஷீர்அகமது தலைமை வகித்தார்.
 உண்ணாவிரதத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
 சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையிலிருந்து அமைக்கப்பட்ட விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்காததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.
 இந்தப் பகுதியில் சாலையைக் கடந்தபோது நேரிட்ட விபத்துகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 எனவே, தொடரும் உயிரிழப்பு, விபத்துகளைத் தடுக்க மேம்பாலத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இனியும் காலம் தாழ்த்தினால் அல்லது மேம்பாலம் அமைக்க மறுத்தால் அடுத்தக் கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து, இங்குள்ள சுங்கச்சாவடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
 இதற்கு வணிகர் சங்கங்கள் துணை நிற்கும் என்றார்.
 தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் மாசிலாமணி, ராதாமணி, பாமக மாநில துணைத் தலைவர் வெ.அரிகரன், மாவட்டச் செயலர் புகழேந்தி, மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், மதிமுக மாவட்டச் செயலர் பாபுகோவிந்தராஜ், தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் உள்ளிட்டோர் மேம்பால கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
 போராட்டத்தை பாபுஜீவானந்தம், ஜனார்த்தனன், காஜாமொய்தீன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். வியாபாரிகள், கட்சியினர், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
 கடைகள் அடைப்பு: முன்னதாக, விக்கிரவாண்டியில் மேம்பாலம் அமைக்குமாறு, தொடர்ந்து வலியுறுத்தி வரும் வியாபாரிகள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 இதனால், அத்தியாவசிய மருந்துக் கடைகள், டீ கடைகள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
 போராட்டத்தின்போது சாலை விபத்து
 விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிற்பகல் ஒரு மணியளவில், புறவழிச்சாலையைக் கடக்க முயன்ற அனந்தபுரத்தைச் சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (68) மீது மினி லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 இந்த விபத்தை நேரில் கண்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, புறவழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேம்பாலம் அமைக்காததால்தான் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 தகவலறிந்த காவல் ஆய்வாளர் பரணி தலைமையிலான விக்கிரவாண்டி போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இந்த மறியலால், சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com