வளவனூர் தாக்குதல் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம்

வளவனூர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து

வளவனூர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் ஆதார் அட்டையை ஒப்படைப்பதாக வந்து புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 இதுகுறித்து வளவனூர் குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டைகளுடன் வந்து, ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
 வளவனூரில் பள்ளி மாணவியை செவ்வாய்க்கிழமை மாலை 3 இளைஞர்கள் அழைத்து வந்து, ஊரல்குட்டை வீதியில் உள்ள உதயகுமார் வீட்டு வாசலில் வைத்து, ஒழுங்கீன செயலில் ஈடுபட்டனர்.
 அதனை தட்டிக்கேட்ட உதயகுமாரை அந்த இளைஞர்கள் தாக்கினர். இதைத் தட்டிக்கேட்ட அக்கம் பக்கத்தினரை, அந்த இளைஞர்கள் செல்லிடப்பேசி மூலம் காலனிப் பகுதிக்கு தகவல் கொடுத்து உறவினர்களை வரவழைத்து தாக்கினர். இதில், பழனி, சுகுமார், உதயகுமார், கார்த்தி, சீனிவாசன் ஆகியோர் காயமடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 இந்த நிலையில், தாக்குதலுக்குள்ளான உதயகுமார், கார்த்திக், சுகுமார் ஆகியோரை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து, வளவனூர் போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்ய முயற்சித்துள்ளனர். இது ஏற்புடையதல்ல. இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதும், ஒரு தரப்பினர் வந்து அச்சுறுத்துவதும் தொடர்கிறது. மேலும், இது இரு தரப்பு மோதலுக்கும் வழிவகுக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அப்பகுதி வசிக்க தகுதியற்ற இடமாகக் கருதி ஆதார் அட்டைகளை ஒப்படைத்து விடுவோம் என்று அதில் தெரிவித்திருந்தனர். மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com