இடுபொருள்கள் குறித்த தகவல்: வேளாண் துறையினர் மீது புகார்

கோலியனூர் வட்டாரத்தில் வேளாண் பயிற்சி,  இடுபொருள்கள் குறித்த தகவல்களை வழங்காமல் குறிப்பிட்ட முகவர்களை மட்டும் நிரந்தரமாக வைத்துக்கொண்டு வேளாண் துறையினர் செயல்பட்டு வருவதாக விவசாயிகள்

கோலியனூர் வட்டாரத்தில் வேளாண் பயிற்சி,  இடுபொருள்கள் குறித்த தகவல்களை வழங்காமல் குறிப்பிட்ட முகவர்களை மட்டும் நிரந்தரமாக வைத்துக்கொண்டு வேளாண் துறையினர் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் டி.குமாரவேல் தலைமை வகித்தார். 
 வட்டாட்சியர்கள் சையத்மெஹ்முத் (விழுப்புரம்),  சுந்தரராஜன் (விக்கிரவாண்டி),  குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் மனோகரன்,  விக்கிரவாண்டி வழங்கல் அலுவலர் முருகன்,  துணை வட்டாட்சியர் வெங்கடாசலபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம்,  விக்கிரவாண்டி,  வானூர் வட்டார விவசாயிகளின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் வைத்துப் பேசியதாவது:   தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவைத் தொகை ரூ.22 கோடி உள்ளதை உடனே வழங்க வேண்டும்,  நிலுவை வழங்காமல் போனால்,  கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பை மாற்றியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழாண்டு எள் பயிரிடுவது பலன் தரும் என்பதால்,  உரிய எள் விதைகளை வேளாண் துறையினர் வழங்க வேண்டும். கால்நடைத் துறையில் மானிய பொருள்கள் வழங்குவதில்லை.  விழுப்புரம்,  விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரசு நிர்ணயித்த விலையை விட  குறைவான விலையில் நெல் ஏலம் எடுக்கப்படுவதால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.  
கோலியனூர் வட்டார வேளாண் துறையினர்,  விவசாய பயிற்சிகள் குறித்தும்,  மானிய பொருள்கள் வழங்குவது குறித்தும் தகவல்களை தெரிவிப்பதில்லை.  விவசாயிகள் சிலரை முகவர்கள் போல வைத்துக்கொண்டு,  அவர்கள் மூலம் பயிற்சி முகாம் நடத்துவது,  மானிய பொருள்கள்,  விதைகளை அவர்கள் மூலம்  குறிப்பிட்ட சிலருக்கே வழங்கி வருகின்றனர். ஒரு கூட்டம் நடத்திவிட்டு பலமுறை நடத்தியதாக கையெழுத்து பெறுகின்றனர்.
வேளாண் அலுவலர்கள் கிராமங்களுக்கே வருவதில்லை.  பயிற்சிக் கூட்டம் நடத்தும்போது,  குறிப்பிட்ட ஒரே கிராமத்துக்குச் சென்று வருவதோடுசரி,  இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு வேளாண் துறை குறித்த எந்தத் தகவலும் தெரிவதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இதற்குப் பதிலளித்த கோட்டாட்சியர் குமாரவேல்,  கோரிக்கைகள் தொடர்பாக உரிய துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேசி நிலுவை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com