டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.47 ஆயிரம் பறிப்பு

மயிலம் அருகே, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் டாஸ்மாக் மதுக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.47 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். 


மயிலம் அருகே, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் டாஸ்மாக் மதுக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.47 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். 
 திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு கீழ்எடையாளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதன் மேற்பார்வையாளராக ஆலகிராமத்தைச் சேர்ந்த சங்கர் (45) பணியாற்றி வருகிறார். இவருடன், விற்பனையாளர்கள் திருவேங்கடம் (43),  சோழன் (40) ஆகியோர்  வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனர்.  இவர்கள், அன்று இரவு 10  மணியளவில் மதுபான விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிச் செல்ல தயாராகினர். அப்போது அங்கு 2 பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், கத்தி போன்ற ஆயுதங்களுடன் மதுக் கடைக்குள் நுழைந்தனர்.  அவர்கள் மது விற்ற பணத்தை தருமாறு கேட்டு மிரட்டியதோடு, கடை மேற்பார்வையாளர் சங்கரின் கையில் கத்தியால் வெட்டினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விற்பனையாளர் சோழன், தனது  கையில் வைத்திருந்த மதுப் புட்டிகள் விற்பனை தொகை ரூ.47 ஆயிரத்தை தூக்கி வீசிவிட்டு ஓடியுள்ளார்.  
 அப்போது, இரவு நேர பாதுகாப்புப் பணிக்காக மதுக் கடை பகுதிக்கு மயிலம் போலீஸார் வந்துள்ளனர். இதையறிந்த, மர்ம நபர்கள் ரூ.47 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பைக்குகளில் தப்பிச் சென்றனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் சம்பவம் குறித்து அறிந்தனர். பின்னர், சங்கரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 மதுபான விற்பனைத் தொகை மொத்தம் ரூ.1.81 லட்சம் எனக் கூறப்படுகிறது. 
இதில்,  சங்கரிடம் ரூ.1லட்சத்து 33 ஆயிரமும், விற்பனையாளர் சோழனிடம் ரூ.47 ஆயிரமும் இருந்துள்ளது. மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியதால் விற்பனையாளர் சோழன் ரூ.47 ஆயிரத்தை தூக்கி வீசியதால் மர்ம நபர்கள் அந்தப் பணத்தை மட்டும் திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.  இருப்பினும் சங்கரிடமிருந்த எஞ்சிய பணம் தப்பியது.  
 இந்தச் சம்பவத்தை அடுத்து போலீஸார் உடனடியாக விரட்டிச் சென்றதில், தப்பியோடியவர்களில் இருவரை மடக்கிப் பிடித்து, ரூ.16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய எஞ்சிய 4 பேர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து,  மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com