திண்டிவனம் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 2 லாரிகள் கவிழ்ந்தன

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் 2 லாரிகள் கவிழ்ந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 திருப்பூரிலிருந்து சென்னை, மாதவரம் நோக்கி இறைச்சிக்காக கறிக் கோழிகள், காடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. லாரியை திருப்பூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் ஓட்டினார்.
திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை, அய்யனார் கோயில் அருகே சென்றபோது, இந்த லாரியை ஆம்னி பேருந்து, பால் லாரி ஆகியவை உரசுவது போல முந்திச் சென்றன. இதனால், ஓட்டுநர் கனகராஜ் லாரியை வலது புறமாக திருப்பினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, மையத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி, சாலையில் கவிழ்ந்தது.  அந்த நேரத்தில், பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு பெட்டக லாரியின் ஓட்டுநர், கவிழ்ந்து கிடந்த லாரி மீது மோதாமல் இருக்க, அவரது 
சரக்குப் பெட்டக லாரியை இடதுபுறமாக திருப்பியுள்ளார். இதில், அந்த லாரியும் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுற சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இருப்பினும், இரு லாரிகளில் இருந்தவர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து நிகழ்ந்த போது, பின்னால் வந்த கார் உள்ளிட்ட சில வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதனால், அந்த வாகனங்களுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது. 
நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார், மயிலம் போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். அடுத்தடுத்த விபத்துகள் காரணமாக, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மயிலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com