நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
By DIN | Published On : 17th April 2019 06:43 AM | Last Updated : 17th April 2019 06:43 AM | அ+அ அ- |

வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில், புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே மேட்டுப்பாளையம்-பூந்துறை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற காசிப்பாளையத்தைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் மணிபால் (29) என்பவரை மர்ம நபர்கள் வழிமறித்து நாட்டுவெடிகுண்டுகளை வீசினர். இதில் பலத்த காயமடைந்த மணிபால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, வானூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக புதுச்சேரி மாநிலம், முத்தரப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரங்கராஜன்(22), ஊசுட்டேரியைச் சேர்ந்த முருகையன் மகன் முகேஷ்(23) ஆகியோர் விழுப்புரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி மும்தாஜ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...