வாக்குப்பதிவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  மொத்தமுள்ள 3,227 வாக்குச் சாவடிகளில்,  26.65 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட விழுப்புரம் (தனி),  கள்ளக்குறிச்சி,  ஆரணி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும்,  தேர்தல் நடத்தும் அலுவலருமான இல.சுப்பிரமணியன் தலைமையில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
3,227 வாக்குச் சாவடிகள்: பேரவைத் தொகுதிகளில் செஞ்சியில் 304,  மயிலம் 265,  திண்டிவனம் 264,  வானூர் (தனி)  277,  விழுப்புரம் 284,  விக்கிரவாண்டி 275, திருக்கோவிலூர் 286, உளுந்தூர்பேட்டை 337, ரிஷிவந்தியம் 305, சங்கராபுரம் 300, கள்ளக்குறிச்சி (தனி)  330 ஆகிய 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,227 வாக்குச் சாவடிகளில்,  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக,  11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும்,  கூடுதலாக 20 சதவீதம் மின்னணு வாக்குப் பதிவு சாதனங்களும்,  வாக்களித்ததை உறுதி செய்யும் விபிபாட்  சாதனங்களும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
287 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள்: இதற்காக, மின்னணு வாக்குப் பதிவு சாதனங்களைக் கொண்டு செல்வது, வாக்குப்பதிவு முடிந்து பாதுகாப்புடன் கொண்டுவருவது,  வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 287  நடமாடும் கண்காணிப்புக் குழு (மொபைல் பார்ட்டி) அமைக்கப்பட்டுள்ளன. இதில், உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் இரு காவலர்களும், ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல் படையினரும் இடம் பெறுவர். இந்த மொபைல் குழுவினர், விழுப்புரம் மாவட்ட காவல் துறை மைதானத்தில் தேர்வு செய்யப்பட்டு,  அவர்களுக்கு வாகனம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
252 வாக்குச் சாவடிகள் 
பதற்றமானவை: இந்தத் தேர்தலில் 161 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 91 வாக்குச் சாவடிகள் பிரச்னைக்குரியனவாகவும்  கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகள் இணையதள கேமரா (வெப் கேமரா) மூலம் நேரடி கண்காணிப்பும்,  நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15,673 வாக்குச் சாவடி அலுவலர்கள்: வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவை மேற்கொள்வதற்காக,  வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 4 நிலை அலுவலர்கள் என்று 15,673 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுடன் தேர்தல் பணியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர்.
ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,227 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அறைகள்,  மேஜை நாற்காலிகள் அமைத்தல்,  மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம்,  மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
இதே போல,  மின்னணு வாக்குப் பதிவு சாதனங்களை எடுத்துச் செல்லும் 278 வாகனங்களில்,  இரு தினங்களாக ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டுநர் இருக்கை அருகே பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனத்தின் மூலம் அந்த வாகனம் உரிய வாக்குச் சாவடிக்கு செல்வதையும்,  மீண்டும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குப்பதிவு சாதனங்களை கொண்டு
வருவதையும் கண்காணித்து உறுதி செய்ய இயலும்.
வாக்குச்சாவடி பொருள்கள்: தேர்தல் வாக்குப் பதிவுக்காக, வாக்குச் சாவடிகளில்,  பயன்படுத்துவதற்கான விரலில் வைக்கும் அழியாத மை,  எழுது பொருள்கள்,  படிவங்கள்,  சீல் வைக்கும் முத்திரைகள்,  சணல்,  நூல்,  வாக்குச் சாவடியில் வைக்கும் வேட்பாளர்கள் பெயர்கள் சின்னங்கள் குறித்த தட்டிகள் உள்ளிட்ட 80 வகையானப் பொருள்கள்,  அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தயார் செய்து,  சிறு பைகளாக தயார் செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதனுடன் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்காளர் பட்டியல் இறுதி செய்து,  வட்டாட்சியர்கள்,  வருவாய் ஆய்வாளர்கள் மேற்பார்வையில்,  கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து,  தயார் செய்து வைத்துள்ளனர். இவைகள் அனைத்தும்,  மின்னணு வாக்குச் சாதனங்களுடன்,  11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு,  புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட தயாராகி வருகின்றன. 
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.  விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், தேர்தலுக்கு பயன்படுத்தவுள்ள வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
26.65 லட்சம் வாக்காளர்கள்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் 3ஆயிரம் காவலர்கள், 1,500 முன்னாள் ராணுவத்தினர், ஊர்க் காவல் படையினர், தீயணைப்புத் துறையினர், வெளி மாநில சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட 5ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்.18ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 லட்சத்து, 36 ஆயிரத்து,  175 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து 29 ஆயிரத்து 373 பெண் வாக்காளர்களும், 380 திருநங்கைகளும் என மொத்தம்,  26 லட்சத்து 65 ஆயிரத்து 928 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com