வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் ஆய்வு

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதில், பாமக வேட்பாளர் தரப்பில் ரூ.35 லட்சமும்,  விசிக வேட்பாளர் தரப்பில் ரூ.27 லட்சம் அளவிலும் தேர்தல் செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்பாளர்களின் செலவின கணக்குகள் அவ்வப்போது சமர்ப்பிக்கப்பட்டு, செலவின பார்வையாளர்களால் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு வருகிறது.
வேட்பாளர்கள் ரசீதுகளுடன் வழங்கும் தேர்தல் செலவுகளை கணக்குகளுடன் தேர்தல் துறை ஊடக கண்காணிப்புப் பிரிவு அந்தந்த வேட்பாளர்களை கண்காணித்து வழங்கும் செலவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து,  அதுவும் சேர்க்கப்படுகிறது.
வேட்பாளர்களின் செலவின கணக்குகள் முதல்கட்டமாக கடந்த ஏப்.5-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக, ஏப். 10-ஆம் தேதியும் தேர்தல் அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இந்த வகையில், 3-ஆம் கட்டமாக, செலவின கணக்குகளை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தனர். இந்த செலவின கணக்குகளை,  விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் டெபாஷிஷ் லெஹரி,  உணவேக்கர்கிரன் பஞ்சம்ரர் ஆகியோர்,  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது,  அமமுக வேட்பாளர் என்.கணபதி தரப்பில், அவர் உள்ளிட்ட 3 தொகுதி வேட்பாளர்களுக்காக அவரது கட்சியினர் சார்பில் செய்தித்தாள்களில் வந்த பொது விளம்பரத்தின் செலவை சேர்க்க வேண்டுமென பார்வையாளர்கள் தெரிவித்தனர். 
இதனை, கணபதி தரப்பில் ஏற்கவில்லை. பிறகு மூன்றில் ஒரு பங்கு செலவினத்தை அவரது கணக்கில் பதிவு செய்தனர்.
தொடர்ந்து,  பாமக,  விசிக உள்ளிட்ட வேட்பாளர்கள் தரப்பில், அவர்களது பிரதிநிதிகள் செலவினக் கணக்குகளை சமர்ப்பித்தனர். அதனை ஆய்வு செய்து, தேர்தல் பார்வையாளர்கள் பதிவு செய்தனர்.
இந்த ஆய்வின்படி,  ஏப்.14-ஆம் தேதி வரை,  பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் தரப்பில் ரூ.35.38 லட்சம்,  விசிக வேட்பாளர் துரை.
ரவிக்குமார் தரப்பில் ரூ.27.75 லட்சம்,  அமமுக வேட்பாளர் கணபதி தரப்பில் ரூ.7.8 லட்சம் செலவின கணக்கில் பதிவு செய்துள்ளனர். 
ஒரு வேட்பாளர் தரப்பில்,  அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவிட அனுமதியுள்ள நிலையில், செலவின கணக்குகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இறுதிக் கட்ட செலவின ஆய்வுக் கூட்டம்  ஜூன் 20ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறவுள்ளது. அதில், மீதமுள்ள செலவின கணக்குகளை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பர்.
இந்த ஆய்வின்போது,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஸ்ரீதர்,  உதவி செலவின பார்வையாளர்கள் த.ஞானவேல்,  ஆனந்தன்,  சரஸ்வதி, லில்லி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com